இல்லம் தேடி கல்வித் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அரசு ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும். இத்திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொண்டர்களும் மேற்கொள்வார்கள் எனில் இங்கே ஷாகாக்கள் நடத்தும் ‘சங்பரிவார்’ கும்பல் ஊடுருவி பின்சுமனங்களில் மதவெறி நஞ்சு விதைக்கும் விபரீதம் ஏற்படும் என்பதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் தனித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு தனி கல்விக் கொள்கை உருவாக்க உயர்நிலை வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உறுதியளித்த முதலமைச்சர், ஒன்றிய அரசின் வஞ்சகத் திட்டங்களை கைவிட்டு தமிழ்நாட்டின் சமூக நீதி வழங்கல் முறையை பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.