தமிழ்நாடு

விதிகளை பின்பற்றாவிட்டால் தியேட்டர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் உதயக்குமார்

விதிகளை பின்பற்றாவிட்டால் தியேட்டர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் உதயக்குமார்

webteam

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத தியேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டனர். அத்துடன் ஏராளமான திரையரங்க ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். அதன்பின்னர், மத்திய அரசு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என அனுமதியளித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு அன்றைய தினம் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதியளிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து திரையரங்குகளை திறக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கை பலமுறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், தமிழகத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. ஆனால் புதுப்படங்கள் எதுவும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவில்லை. ஏற்கெனவே வெளியான பழைய படங்களே திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து பொங்கல் ரிலீசை முன்னிட்டு 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டுமென திரைத்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் நடிகர் விஜய்யும், முதல்வர் பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். பின்னர் நடிகர் சிலம்பரசனும் தனது அறிக்கை வாயிலாக, 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு திரைத்துறையினர் வரவேற்பை தெரிவித்திருந்தாலும் மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதனால் கண்டிப்பாக கொரோனா பரவும் அபாயம் உள்ளது என வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “தியேட்டர்கள் 100% இயங்க அனுமதி அளித்திருப்பது பெரும் வரவேற்பையும் முதல்வருக்கு பாராட்டுகளையும் பெற்று தருகிறது. பள்ளிகள் இயங்கினால் முழு அளவு மாணவ மாணவிகள் வருகை தர வேண்டும். ஆனால் தியேட்டர்கள் அப்படியல்ல. குறிப்பிட்ட பார்வையாளர்கள் வந்தாலே போதுமானது.

மருத்துவர்கள் அறிவுரையின் அடிப்படையிலேயே தியேட்டர்கள் முழு அளவு இயங்க அனுமதி அளித்திருந்தாலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தியேட்டர் உரிமையாளர், பார்வையாளர்கள் கவனமாக கையாள வேண்டும். கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காத திரையரங்குகள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை  மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதி முடிவை மறுபரிசீலனை செய்ய மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருவது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்றார்.