தமிழ்நாடு

'பாஜகவில் இருந்து விலகுகிறேன்' மதுரை மாவட்ட தலைவர் அறிவிப்பு

'பாஜகவில் இருந்து விலகுகிறேன்' மதுரை மாவட்ட தலைவர் அறிவிப்பு

webteam

நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக நிதியமைச்சரை சந்தித்து மன்னிப்பு கோரிய நிர்வாகி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும்போது திமுக - பாஜக இடையே நடைபெற்ற மோதலை அடுத்து மதுரை விமான நிலையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினார்கள், இச்சம்பவம் தொடர்பாக 5-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நடந்த சம்பவத்திற்கு நிதியமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும், நிதியமைச்சர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் போராட்டம் நடத்துவோம் என மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சரவணன் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்றிரவு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மருத்துவர் சரவணன் சந்தித்தார். காலையில் விமான நிலையத்தில் பாஜகவினர் நடந்து கொண்டது குறித்தும், செருப்பு வீசிய சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். பின்னர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

ராணுவ வீரரின் உடலுக்கு வீர வணக்கம் செலுத்த சென்றிருந்தோம், என்ன தகுதி அடிப்படையில் அஞ்சலி செலுத்த வந்தீர்கள் என நிதியமைச்சர் கேட்டார், இதனையடுத்து விமான நிலையத்தில் விரும்பதாக நிகழ்வுகள் நடந்தது.

விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. அமைச்சர் அமெரிக்காவில் படித்தவர், ராணுவ வீரரின் உடல் அரசு விதிமுறைகள் படி அஞ்சலி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு வெளியே அல்லது வீரரின் வீட்டில் அஞ்சலி செலுத்தலாம் என அமைச்சர் சொன்னார்.

அமைச்சரின் கருத்தை நான் தனி மனித தாக்குதலாக எடுத்து கொண்ட்டேன், நான் பாரம்பரியமாக திராவிட குடும்பத்தில் இருந்து வந்தவன், ஓராண்டுக்கு முன் பாஜகவில் சேர்ந்தேன், பாஜகவினர் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்தனர்.

அதையும் பொறுத்துக் கொண்டு நான் பாஜகவில் பயணித்தேன், அமைச்சர் கார் மீதான தாக்குதல் எனக்கு மன உளைச்சலை உண்டாக்கியது, எனக்கு தூக்கம் வராத காரணத்தால் நள்ளிரவு நிதியமைச்சரை சந்தித்தேன், நிதியமைச்சரை சந்தித்து நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்டேன், பாஜக தொண்டர்கள் கட்டுபாட்டை மீறி நடந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது,

நிதியமைச்சர் நிகழ்வை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, இது போன்ற துவேசமான அரசியலை செய்ய நான் ஒரு ஆளாக இருக்கக் கூடாது என நினைதேன், அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டதால் மனது இலகுவாக மாறி உள்ளது, நான் தனிப்பட்ட முறையில் அமைச்சரை சந்தித்தேன்,

பாஜகவின் பதவியை விட மன அமைதி மிக முக்கியமானது, பாஜகவில் உறுதியாக நான் தொடர மாட்டேம், பாஜகவின் மத, வெறுப்பு அரசியல் எனக்கு பிடிக்கவில்லை, காலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் அனுப்பி வைக்க உள்ளேன்,

திமுக என்னுடைய தாய் வீடு, திமுகவில் இணைவது குறித்து முடிவு எடுக்கவில்லை, திமுகவில் சேர்ந்தாலும் தவறில்லை, நான் எனது டாக்டர் தொழிலை பார்க்கப் போகிறேன் எனக் கூறினார்.