தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி-யின் கேள்வியும் அமைச்சரின் பதிலும்

தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி-யின் கேள்வியும் அமைச்சரின் பதிலும்

webteam

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது பற்றி நாடாளுமன்றத்தில் நான் எழுப்பியிருந்த கேள்விக்கு (எண் 632ஃ 09.12. 2022) ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் பதில் அளித்துள்ளார் என மதுரை எம்பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அளித்துள்ள பதிலில் தமிழக மீனவர்கள் 2019-இல் 190 பேர், 2020-இல் 74 பேர், 2021-இல் 143 பேர், 2022-இல் 219 பேரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் இன்னும் சிறைகளில் இருக்கிறார்கள். கைப்பற்றப்பட்ட படகுகள் 2019-இல் 39, 2020-இல் 11, 2021-இல் 19, 2022-இல் 30 என்றும் அவற்றில் மீண்டும் திரும்ப மீட்கப்பட்ட படகுகள் 2019-இல் 1, 2020-இல் 1, 2021-இல் 4, 2022-இல் 0 என்றும் தகவல்களை தந்துள்ளார்.

இந்திய தூதரகம், கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களின் நலன், சட்ட உதவி செய்து வருவதாகவும், இப்பிரச்னை குறித்து பிரதமர்கள் மட்டத்தில் இணைய வழியில் செப்டம்பர் 2020, இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் இலங்கை மீன்வள அமைச்சர் மட்டத்தில் ஜூன் 2021, மார்ச் 2022-லிலும், இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் இலங்கை நிதி அமைச்சர் மட்டத்தில் இணைய வழியில் ஜனவரி 2022-லிழும் விவாதிக்கப்பட்டுள்ளது என்றும், 2016-இல் 2 + 2 (இரண்டு நாடுகளின் வெளியுறவு, மீன்வள அமைச்சர்கள்) சந்திப்பில் உருவாக்கப்பட்ட கூட்டு செயல் குழு மார்ச் 2022-இல் ஐந்தாவது முறையாக கூடி விரிவாக விவாதித்துள்ளது என்றும் அமைச்சர் பதிலில் தெரிவித்துள்ளார்.

'அரசு முயற்சிகளை எடுப்பதாக கூறினாலும் இலங்கை கடற்படையின் அத்து மீறல்களும், கைதுகளும் அதிகரித்து வருவதையே அமைச்சரின் பதிலில் உள்ள விவரங்கள் சொல்கின்றன. 2019-இல் 190 கைதுகள் என்பது கோவிட் காலத்தில் மட்டும் சற்று குறைந்தாலும் 2022-இல் இதுவரை 219 என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. நான்கு ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 99 படகுகள் கைப்பற்றப்பட்டதில் 93 படகுகள் மீடகப்படவில்லை.

ஆகவே அரசு முறை முயற்சிகள் இன்னும் தீவிரமாக்கப்பட வேண்டும். இன்னும் சிறையில் இருக்கிற 21 தமிழக மீனவர்களை உடன் விடுதலை செய்யப்பட நடவடிக்கைகள் வேண்டும்.' என்று சு. வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.