கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மகன் மற்றும் அவரது தந்தையின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாக, அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மனித உரிமை ஆர்வலர்களும் கேள்விக்கணைகளை தொடுக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்சிசி பயிற்சி முகாமில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சிவராமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது உயிரிழந்தார். அவரது தந்தையும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது உயிரிழந்தார். இருவரின் மரணத்திலும் பல்வேறு சந்தேகங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் எழுப்பி இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,
வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில், முக்கிய புள்ளிகளின் பெயர்களை சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
போலி என்.சி.சி. முகாம் நடந்த பள்ளி நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?.. தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல்துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.“ என்று வன்கொடுமை வழக்கில் முக்கியப் புள்ளிகளின் தொடர்பு குறித்த இபிஎஸ் எழுப்பிய அதே கேள்வியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் முன்வைத்து இருக்கிறார்.
“இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகனின் மரணங்கள் நடந்துள்ளதா? “ என்ற பலத்த சந்தேகம் எழுவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “குற்றம்சாட்டப்பட்ட சிவராமன், எப்போது எலிப்பசை சாப்பிட்டார், அவரது தந்தை எப்படி இறந்தார் என்பதில் சந்தேகம் இருக்கிறது.” என்று கூறினார்.
மனித உரிமை ஆர்வலர்களும் மகன், தந்தை மரணம் குறித்து அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பி இருப்பதோடு, காவல்துறையின் பாதுகாப்பில் இருப்பவர் இறந்ததில் சந்தேகம் எழுவதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி டிஃபேன் குறிப்பிட்டார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியும் தந்தை, மகன் மரணம் தொடர்பாக கேள்வி எழுப்பி இருக்கிறது. சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தமது எக்ஸ் வலைதளப்பதிவில், ”இருவரின் மரணம் பல கேள்விகளை எழுப்புகிறது.” என்று தெரிவித்துள்ளார்.