தமிழ்நாட்டில் விரைவில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வினியோகித்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார்.
சட்டப் பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.ராஜேஷ்குமார், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்து பேசிய துறையின் அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இதில், முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகளை வசதி படைத்த பலர் பெற்றிருப்பதும், முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைகள் வசதி இல்லாதோருக்கு வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதுபற்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தரமான அரிசியை வழங்க தமிழ்நாடு அரசு உறுதியேற்றுள்ளதாகவும், ரேஷன் கடைகளுக்கு அரிசி வினியோகம் செய்யும் ஆலைகள், இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் 'கலர் ஷேடிங்' என்ற, அரிசியை தரம் பிரிக்கும் இயந்திரத்தை நிறுவ உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.