கோவில் பூசாரி புதியதலைமுறை
தமிழ்நாடு

கோவில் கேட்டை தொட்டதும் பாய்ந்த மின்சாரம்.. துடிதுடித்த பூசாரி.. துணிந்து உயிரை காத்த மக்கள்! வீடியோ

PT WEB

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், சென்னையில் கடந்த சில தினங்களாக மழை பெய்த நிலையில், புழல் சுற்றுவட்டார பகுதிகளில் 18 செமீ அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதியில் ஆங்காங்கே மழை நீரும் தேங்கி நின்றது. இதற்கிடையே, புழலில் வள்ளுவர் நகரில் அமைந்துள்ள குபேர விநாயகர் கோயிலைச் சுற்றியும் மழைநீர் தேங்கியுள்ளது. நேற்று முன்தினம் கோயிலுக்கு சென்ற பூசாரி, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கோயிலுக்குள் செல்ல முற்பட்டுள்ளார்.

தேங்கி இருந்த மழைநீரில் இறங்கி கோயில் கேட்டைத் திறக்க முற்பட்ட நிலையில், மின்கசிவு காரணமாக கேட்டில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இந்த நிலையில், கேட்டில் கைவைத்த பூசாரி மின்சாரம் தாக்கியதில் அங்கேயே மயங்கினார். இருப்பினும் மின்சாரம் பாய்ந்ததால் கைகள் கேட்டையே பிடித்திருந்தன. இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கத்தி கூச்சலிட்டார். இதற்கிடையே அங்கு வந்த மற்றொரு பெண்மணி, வீடு துடைக்க பயன்படுத்தும் ஸ்ட்டிக்கைக் கொண்டு காப்பாற்ற முயன்றதில், அவருக்கு மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் அங்கிருந்து ஓடிய நிலையில், அங்கு வந்த சுற்றத்தார் தடியை எடுத்து பூசாரியை விலக்கி வெளியே இழுத்தனர்.

உடனடியாக சிபிஆர் செய்து, வாயோடு வாய் வைத்து மூச்சுக்கொடுத்து முதலுதவி செய்த நிலையில், பூசாரி காப்பாற்றப்பட்டார்.

தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையே, மின்சாரம் பாய்ந்து கோவில் முன்னே மயங்கிய பூசாரியை, சமயோஜிதமாக செயல்பட்டு அப்பகுதியனர் காப்பாற்றிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்படும் என்பதால், கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த வீடியோ இருக்கிறது.