செய்தியாளர்: எஸ்.ஜெய்சங்கர்
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தொடக்கக்காலம் முதலே செய்தியாளராகப் பணியாற்றி வந்தவர் அப்துல் ரகுமான். அவர் உடல் நலக்குறைவால் இன்று (செப்.25, 2024 - புதன்கிழமை) காலை காலமானார். அவருக்கு வயது 54.
புதுச்சேரியை 2011 டிசம்பரில் ‘தானே’ புயல் தாக்கியபோது, துணிச்சலோடு களமிறங்கி, பாதிப்புகளைப் பதிவு செய்தவர் ரகுமான். 2015இல் கனமழையால் சென்னை தத்தளித்தபோதும், 2016இல் வர்தா புயல், 2017இல் ஒகி புயல், 2018இல் கஜா புயல் தமிழகத்தைத் தாக்கியபோது, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தியாளர் குழுவோடு இணைந்து, தமிழகத்திலும் களப் பணியாற்றியவர். கடினமான நேரங்களிலும், மனம் தளராது, தொய்வின்றி தனது செய்திப் பணிகளை நிறைவேற்றி வந்தவர்.
புதிய தலைமுறையின் முதுநிலை செய்தியாளர் அப்துல் ரகுமான்புதுச்சேரி மாநிலத்தில் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து, தன்னாலான வகையில் பல்வேறு நலப்பணிகளுக்குத் தூண்டுகோலாகவும், உறுதுணையாகவும் இருந்தவர் ரகுமான்.
புதுச்சேரி அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும், அதைத் திருத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதிலும் திறம்படச் செயல்பட்டவர். ஆளும் வர்க்கத்தினர், அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, அடித்தட்டு மக்களோடும் நெருங்கிப் பழகும் தன்மை கொண்டவர். எந்தச் சூழலிலும், பக்கச் சார்பின்றி செய்திகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவர்.
புதுச்சேரியில் நடந்தேறிய அவலங்களை வெளி உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டிய ரகுமான், புதுச்சேரி மக்களின் குரல்களில் ஒன்றாகத் திகழ்ந்தார். புதுச்சேரி சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திலும், புதைசாக்கடையிலிருந்து விஷ வாயு வெளியேறி மூவர் உயிரிழந்த சம்பவத்திலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான குரலாக களத்தில் ஒலித்தவர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலர் மாண்டபோது, கள்ளச்சாராயம் குடித்து இறந்த ஒருவரின் இறப்புக்காக சென்ற இடத்தில் மது அருந்தியபோதுதான் மேலும் பலர் மாண்டனர் என்ற உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர். இப்படி எண்ணற்ற செய்திகள் மூலம், மக்களுக்கான செய்தியாளராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் ரகுமான்.
காரைக்காலை பூர்வீகமாகக் கொண்டு, தந்தை ஏ.ஏ.அலீம் வழியில், செய்தியாளராகவே வாழ்ந்து மறைந்திருக்கும் அப்துல் ரகுமானின் மனைவி பெயர் மும்தாஜ். இத்தம்பதிக்கு மூத்த மகனான (புதிய தலைமுறை காரைக்கால் செய்தியாளர்) அப்துல் அலீம் உள்பட 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இன்று உடல்நலக்குறைவால் அவர் காலமான நிலையில், அவருக்கு அரசியல் கட்சியினர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில்,
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, “ஊடகத்துறையில் தடம்பதித்து அயராத உழைப்பால் தனக்கென தனியிடத்தைப் பிடித்தவர் ரகுமான்; ரகுமானின் மறைவு ஊடகத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்” என்று தன் இரங்கலை தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவரும், புதுச்சேரியின் முன்னாள் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், “புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுச்சேரி செய்தியாளர் ரகுமான் உயிரிழந்த செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். ஒரு நல்ல பத்திரிகையாளரால் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை சமுதாயத்தில் ஏற்படுத்த முடியும் என்பதற்கு ரகுமான் ஒரு உதாரணம்” என்று தன் வேதனையை பகிர்ந்தார்.
புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, “புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுச்சேரி செய்தியாளர் அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. செய்தித்துறை மூலம் புதுச்சேரி வளர்ச்சிக்கு அப்துல் ரகுமான் ஆற்றிய பணி சிறப்பானது. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏற்றவகையில் அவரது செய்திப்பணிகள் இருக்கும்” என்றார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “செய்தியாளர் ரகுமான் காலமான செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்; 25 ஆண்டுகளாக எனக்கு பழக்கமான ஒரு அன்பான செய்தியாளர் ரகுமான். அனைத்து கட்சித் தலைவர்களிடமும் பரஸ்பரமாக பழகும் நல்ல பண்பைக் கொண்டவர் ரகுமான்; நடுநிலையாக செயல்பட்ட ரகுமானின் இறப்பு ஊடகத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு” என்று தன் இரங்கலை பகிர்ந்துகொண்டார்.
மக்களே பிரதானம் என்ற இலக்கோடு இயங்கும் ‘புதிய தலைமுறை’ குடும்பம் தன்னுடைய மக்கள் சேவகர்களில் ஒருவரை இழந்த துயரைப் பகிர்ந்துகொள்கிறது. மக்களின் நினைவில் இனி ரகுமான் வாழ்வார் என்று ஆறுதல் கொள்கிறது.