தேர்தல் சிறப்பு பேருந்து புதிய தலைமுறை
தமிழ்நாடு

புதிய தலைமுறையின் ‘ஜனநாயகப் பெருவிழா’ - வெற்றிகரமாக நிறைவடைந்த தேர்தல் சிறப்பு பேருந்து பயணம்!

புதிய தலைமுறையின் 'ஜனநாயப் பெருவிழா'வை யொட்டி, வெற்றிகரமாக நிறைவடைந்த தேர்தல் சிறப்பு பேருந்து பயணம் குறித்த தகவல்கள்.

PT WEB

வெற்றிகரமாக நிறைவடைந்த தேர்தல் சிறப்பு பேருந்து பயணம்

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகமாக விளங்கும் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் என்பது ஆயிரம் திருவிழாக்களுக்கு சமம். 2024 நாடாளுமன்றத் தேர்தல் நிலவரத்தை அலசி ஆராய்ந்து செய்திகளை வழங்கிட வேண்டும் என்ற முனைப்புடன், 6 மாதங்களுக்கு முன்பே திட்டமிட ஆரம்பித்திருந்தது புதிய தலைமுறை.

'ஜனநாயகப் பெருவிழா' என்ற புது முயற்சி மூலம் மக்களையும் தலைவர்களையும் களத்திலேயே சந்திக்கத் திட்டமிட்டது புதிய தலைமுறை. அதன் பயனாய் விளைந்தது புதிய தலைமுறையின் 'தேர்தல் சிறப்பு பேருந்து'...

Election Bus - புதிய தலைமுறை

தமிழ் கலாச்சாரத்தின் தொன்மை பேசும் மதுரையில் பேருந்தின் கட்டமைப்புப் பணிகள் ஆரம்பித்தன. இரவும் பகலுமாய் தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றன. பல்வேறு கட்ட ஆலோசனைகள் மற்றும் திட்டமிடலுக்குப் பின்னர், பேருந்து முழுவதுமாக மறுவடிவமைக்கப்பட்டு நடமாடும் செய்தி அரங்கமாகவே மாற்றப்பட்டது.

தலைவர்கள் அமர்ந்து பேசும் கலந்துரையாடல் அரங்கம், அதிநவீன ஒளி ஒலி அமைப்புகள், மின்தூக்கி, தமிழகத்தின் எந்த இடத்தில் இருந்தாலும் தலைமை செய்தி அரங்கத்திற்கு உடனுக்குடன் செய்தி அனுப்பும் அம்சம் என்று முன்னணி தொழில்நுட்ப வசதிகளால் கட்டமைக்கப்பட்டிருந்தது தேர்தல் சிறப்பு பேருந்து. இந்தப் பணிகளில் கிட்டத்தட்ட 100+ பணியாளர்கள் ஈடுபட்டனர்.

தேர்தல் ஆணையம் வாக்களிப்பிற்கான நாளை அறிவித்த மறுநொடி பட்டாசாய் பரபரவென பேருந்துப் பயண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியது புதிய தலைமுறை.

தமிழகத்தின் தென் முனையான கன்னியாகுமரியில் இருந்து பயணம் துவங்கியது. மார்ச் 25, 2024 முதல் பயணிக்க ஆரம்பித்த பேருந்து தமிழகம் மற்றும் புதுவையின் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் சுற்றிச் சுழன்று, இறுதியாக சென்னையை வந்தடைந்தது. 

Election Bus - புதிய தலைமுறை

50க்கும் மேற்பட்ட புதிய தலைமுறை ஊழியர்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக பேருந்துடன் பயணப்பட்டனர். 4 வாரங்களில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் சென்றுள்ள இப்பேருந்து கிட்டத்தட்ட 4500 கிலோமீட்டர் பயணப்பட்டுள்ளது. தமிழக ஊடக வரலாற்றிலேயே இதுபோன்றதொரு தேர்தல் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். இப்பயணத்தை வெற்றிகரமாக நடத்தி, தேர்தல் விழிப்புணர்வு மற்றும் செய்தி சேகரிப்பில் மிகப்பெரிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது புதிய தலைமுறை.

அனைவரின் பாராட்டையும் பெற்ற பேருந்து!

பல்வேறு அரசியல் தலைவர்கள் புதிய தலைமுறையின் முயற்சியைப் பாராட்டினர். கனிமொழி, திருமாவளவன், அண்ணாமலை, விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, அன்பில் மகேஷ், நாராயணசாமி, நயினார் நாகேந்திரன், பாரிவேந்தர், வேல்முருகன், சீமான் உள்ளிட்ட பல தலைவர்கள் ஆர்வமுடன் புதிய தலைமுறை பேருந்தில் பயணம் செய்தவாறே பேட்டியளித்தனர்.

மக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய தலைமுறையின் இந்த முயற்சிக்கு தேர்தல் ஆணையமும் அதிகாரிகளும் பேராதரவு அளித்தனர்.

Election Bus - புதிய தலைமுறை

பொதுமக்கள், முக்கியமாக கல்லூரி மாணவர்கள், நடமாடும் செய்தி அரங்கத்தைக் காண ஆர்வம் காட்டியதோடு பேருந்துடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். சமூக வலைத்தளங்களில் தங்கள் ஊர்களுக்கு சிறப்பு பேருந்து எப்போது வரும் என்றும் நிறைய பேர் ஆர்வத்துடன் கேட்டும் இருந்தனர்.

‘போடுங்கம்மா ஓட்டு' விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் ஒவ்வொரு தொகுதியிலும் எடுத்துக்கூறப்பட்டது. கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட தேர்தல் சிறப்பு நிகழ்ச்சிகள், நாற்பதுக்கும் மேற்பட்ட அரசியல் கலந்துரையாடல்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட பேட்டிகள், 40 தொகுதிகளின் கள நிலவரம் என்று அனைத்து கோணங்களிலும் தேர்தல் செய்திகளை வழங்கியது புதிய தலைமுறை. இதற்கு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களும் தங்களின் ஆதரவினை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற பிரம்மாண்ட நிறைவு விழா நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சத்யபிரதா சாஹு ஐ.ஏ.எஸ், தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு, ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ், கூடுதல் தலைமை ஆணையர், H.M. ஜெயராம், ஐ.பி.எஸ்., காவல்துறை கூடுதல் இயக்குநர், மரு. தேரணி ராஜன், முதல்வர், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Election Bus இறுதி நாள் - புதிய தலைமுறை

களத்தில் நடமாடி, செய்திகளை உடனுக்குடன் பரிமாறி, கோடிக்கணக்கான மக்களைக் கவர்ந்து, அவர்களின் கவனத்தையும் ஆதரவையும் புதிய தலைமுறை பேருந்து பெற்றது என்பதில் துளியும் ஐயமில்லை...

புதிய தலைமுறையின் 'ஜனநாயகப் பெருவிழா' முன்னெடுப்பு குறித்து மேலும் அறிய:

https://www.puthiyathalaimurai.com/election-bus