செய்தியாளர்: என்.ஜான்சன்
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, டபுள் ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலரின் வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காரில் வந்த ஒரு குடும்பத்தினர், உரிய ஆவணங்கள் இன்றி 69,400 ரூபாய் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் வடமாநிலத்தவர்கள் என பின் அறியப்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அந்தப் பெண், “நாங்கள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து விமான மூலம் கோவை வந்தோம். அங்கிருந்து வாடகை காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தோம். எங்களுக்கு இந்த நடைமுறை தெரியாது. இப்போது கையில் செலவிற்கு கூட பணமில்லை. அதனால் எங்களது பணத்தை திரும்பக் கொடுங்கள்” எனக்கேட்டு கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களை சங்கடமடைய வைத்தது.
தேர்தல் பறக்கும் படையினர் இப்படி சிறு குறு வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மருத்துவ செலவுக்காக செல்வோர் போன்றோர் கொண்டு செல்லும் பணத்தை தீவிர விசாரணைக்குப் பின்பே பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.