தமிழ்நாடு

கைவிடபடும் ஓஎன்ஜிசி கிணறுகளின் பொருட்களை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ள பரிந்துரை!

கைவிடபடும் ஓஎன்ஜிசி கிணறுகளின் பொருட்களை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ள பரிந்துரை!

Veeramani

கைவிடப்படும் ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறு அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மண், ஜல்லி உள்ளிட்ட பொருட்களை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள ஓஎன்ஜிசி நிர்வாகம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் சுற்றிய பகுதிகளான நல்லாண்டார்கொல்லை,கள்ளிக்கொள்ளை, கருக்காகுறிச்சி வடதெரு,கீழத்தெரு,புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி ஆகிய 7 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் எண்ணெய் எடுப்பதற்காக கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு ஆள்களை எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு நெடுவாசல் மற்றும் அதனை சுற்றிய கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட போது இந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை எண்ணெய்க் கிணறுகளையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் முள்ளங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஆள்துளை எண்ணெய் கிணறு மற்றும் புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆழ்துளை கிணறு ஆகிய இரு பணிகளுக்காக விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்க ஓஎன்ஜிசி நிர்வாகத்தால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கண்ட இடங்களில் பயன்படுத்தப்பட்ட மண் மற்றும் ஜல்லிகள் போன்ற ரூ 85 லட்சம் மதிப்பிலான 11 ஆயிரம் கன மீட்டர் அளவுள்ள பொருட்களை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் பரிந்துரைக் கடிதம் கொடுத்துள்ளது.

இது அப்பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மற்ற 5 பகுதிகளிலும் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.