செய்தியாளர்: முத்துப்பழம்பதி
21.95 சதுர கிமீ பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை நகராட்சி, 42 வார்டுகளும் 1,68,900 மக்கள் தொகையையும் கொண்டது. 2022-23ஆம் நிதியாண்டின் மொத்த வருவாய் 61.38 கோடி ரூபாய் இருந்தது.
தற்போது, புதுக்கோட்டை நகராட்சியின் அருகே உள்ள வாசவாசல், முள்ளூர், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, 9 ஏ நத்தம் பண்ணை, 9 பி நத்தம் பண்ணை ஆகிய 8 ஊராட்சிகள், தேக்காட்டூர் ஊராட்சியில் 1, 2, 3 வார்டுகள், திருவேங்கைவாசலில் 3, 4 வார்டுகள், வெள்ளனூரில் 7, 8, 9 வார்டுகளையும் இணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 121 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாக புதுக்கோட்டை மாநகராட்சி விரிவடைகிறது. மக்கள் தொகையும் 2.16 லட்சமாக உள்ளது. இந்த விரிவாக்கத்தில் சிப்காட் தொழிற்பேட்டை, துணை நகரம் போன்றவையும் அடங்கும் என்பதால் மொத்த வருவாயும் 64.21 கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஊராட்சிகள் மாநகராட்சியாக மாறும் பட்சத்தில் கிராமங்கள் அழிக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என தங்களின் ஆதகங்களையும் தெரிவிக்கின்றனர்.