அலட்சியத்தால் பறிபோன குழந்தையின் உயிர் pt desk
தமிழ்நாடு

புதுக்கோட்டை: அங்கன்வாடி பணியாளர்களின் அலட்சியத்தால் பறிபோன குழந்தையின் உயிர்

அங்கன்வாடி மையம் 3 நாட்களாக மூடப்பட்டதால் மூன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி நந்தனாவயல் காலனியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தில் பணியாளர் இல்லாத காரணத்தினால் கடந்த மூன்று நாட்களாக முழுமையாக செயல்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் அந்த அங்கன்வாடி மையத்தில் பயின்று வந்த அதே பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்பவர் தனது மூன்றரை வயது மகன் சித்தார்த்தை அங்கன்வாடி மையத்தில் நேற்று காலை விட்டுச் சென்றதாக தெரிகிறது.

தற்காலிக அங்கன்வாடி மையம்

அப்போது அங்கன்வாடி மையத்தை இரண்டு மணிக்கே பூட்டிவிட்டுச் சென்ற பணியாளர்கள் சிறுவன் சித்தார்த்தை அவரது பெற்றோருடன் அனுப்பாமல் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் அனுப்பி வைத்துள்ளனர். அப்போது அவருடன் வீட்டுக்குச் சென்ற சிறுவன் சித்தார்த் அவர்களது வீட்டில் உள்ள கிணற்றில் எதிர்பாரா விதமாக விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், கடந்த மூன்று நாட்களாக சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையம் ஏன் முழுமையாக செயல்படாமல் பூட்டப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதேநேரம் நந்தனாவயல் காலனியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டடம் இடிந்து அபாய நிலையில் உள்ளதால் சாலையோரத்தில் தற்காலிக தகரக் கொட்டகை அமைத்து அதில், அங்கன்வாடி மையம் கடந்த மூன்று மாதமாக செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அந்த தற்காலிக மையத்திற்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம்காட்டி வந்துள்ளனர். இந்நிலையில்தான் இதுவும் கடந்த சில தினங்களாக முழுமையாக செயல்படாமல் இருந்துள்ளது. அதிலும் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.

108 Ambulance

இந்த விவகாரம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் கேட்டபோது...

"சம்பந்தப்பட்ட நந்தனாவயல் அங்கன்வாடி மையம் மூன்று நாட்களாக பூட்டப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையத்தின் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதை வேளையில் பணியாளர் பற்றாக்குறையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு எந்த சத்துணவு மையங்களும் பூட்டப்படவில்லை. நந்தனாவயல் அங்கன்வாடி மையத்திற்கு புதிய அங்கன்வாடி கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த கட்டடம் கட்டி முடிக்கப்படும்" என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்