தமிழ்நாடு

“உயிரோட விடனும்னா ஒருகோடி வேணும்” - மிரட்டிய கும்பல், விரட்டிய போலீஸ்

“உயிரோட விடனும்னா ஒருகோடி வேணும்” - மிரட்டிய கும்பல், விரட்டிய போலீஸ்

webteam

புதுக்கோட்டை  அருகே தொழிலதிபரை காருடன் கடத்தி ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய கும்பலிடமிருந்து துரிதமாக செயல்பட்டு   7 மணி நேரத்தில் போலீசார் அவரை மீட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது . 

புதுக்கோட்டையில் தொழிலதிபராகவும், தனியார்பள்ளி தாளாளராகவும் உள்ளவர் தர்மராஜ் (64). இவர் திருவரங்குளம் அருகே உள்ள தனக்கு சொந்தமான தைல மர காட்டிற்கு சென்று விட்டு, நேற்று மாலை காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல், கார் கண்ணாடியை உடைத்து தர்மராஜ் மற்றும் அவரது ஓட்டுனர் தேவேந்திரன் ஆகியோரை காரில் கடத்திச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தர்மராஜின் உறவினர்கள், நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவின் பேரில், நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது. 

அப்படையினர் திருவரங்குளம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காடுகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லை பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே தொழிலதிபர் தர்மராஜின் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசிய மர்ம நபர்கள், “தர்மராஜை உயிரோட விடனும்னா ஒரு கோடி ரூபாய் கொடுத்து விட்டு கந்தர்வகோட்டை அருகே வந்து தர்மராஜை அழைத்து செல்லுமாறு” கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் கந்தர்வகோட்டையில் பணத்தை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த ஒருவனை, சுற்றி வளைத்து கைது செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தர்மராஜை கடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். 

இரவு 1 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை அருகே கட்டுமாவடி என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடியில், காவல்துறையினர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளனர். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்திவிட்டு, அதற்குள் இருந்து 6 பேர் இறங்கி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், காரினுள் சென்று பார்த்துள்ளனர். காருக்குள் தொழிலதிபர் தர்மராஜ் மற்றும் ஓட்டுனர் தேவேந்திரன் ஆகியோர் வாய்கள் கட்டபட்ட நிலையில் இருந்துள்ளனர். அவர்களை மீட்ட காவல்துறையினர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் தப்பியோடிய கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட தொழிலதிபரை 7 மணி நேரத்தில் விரைந்து செயல்பட்டு மீட்ட காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.