தமிழ்நாடு

'வாகன கடனை கட்டவில்லை' தனியார் வங்கி ஊழியர்கள் செய்த அராஜகம்

'வாகன கடனை கட்டவில்லை' தனியார் வங்கி ஊழியர்கள் செய்த அராஜகம்

kaleelrahman

கறம்பக்குடி அருகே வாகன தவணை தொகையை கட்டவில்லை என தாய் மகன் மீது தனியார் வங்கி ஊழியர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பெத்தாரிகுளம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரின் மனைவி பராசக்தி. தர்பூசணி பழ வியாபாரம் செய்து வரும் பராசக்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கி மூலம் கடன் பெற்று டாட்டா ஏஸ் வாகனம் ஒன்றை வாங்கி அதன் மூலம் பழ வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கறம்பக்குடி அருகே கிருஷ்ணம்பட்டியில் பராசக்தியின் மகன் மாதவராஜ், வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தனியார் வங்கி ஊழியர் சுதாகர் மற்றும் நான்கு நபர்கள் அவர் ஓட்டி வந்த டாட்டா ஏஸ் வாகனத்தை வழிமறித்து வண்டிக்கு தவணை கட்டவில்லை என்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த பராசக்தி மற்றும் அவரது மூத்த மகன் முத்து ராஜா ஆகியோர் தனியார் வங்கி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நிலுவைத் தொகையை செலுத்தி விடுவதாக வாக்குறுதி அளித்தனர். இந்நிலையில் அதனை பொருட்படுத்தாத ஊழியர்கள் பராசக்தியையும் அவரது மகனையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த பராசக்தி மற்றும் அவரது மகன்கள் கறம்பகுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தங்களைத் தாக்கிய தனியார் வங்கி ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பராசக்தி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்..