Teacher, students and villagers pt desk
தமிழ்நாடு

“அவரை போக விடாதீர்கள்..” - பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்.. கண்ணீர் மல்க போராடிய கிராம மக்கள்!

அன்னவாசல் அருகே தங்கள் பள்ளியில் 19 ஆண்டுகளாக பணியாற்றிய ஆசிரியரை பணி மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும், பெற்றோரும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு கண்ணீர் மல்க அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: சுப. முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடுமியான் மலையைச் சேர்ந்த சின்னக்கண்ணு என்பவர் கடந்த 19 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில் அவருக்கு சொக்கம்பட்டி என்னும் கிராமத்திற்கு பணிமாறுதல் கிடைத்துள்ளது.

parents demand

இதனால் அவர் பணி மாறுதல் பெற்று காட்டுப்பட்டி பள்ளியிலிருந்து செல்ல போவதை அறிந்த அந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளும், பெற்றோர்களும் இளைஞர்களும் ஒன்று கூடி அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு பள்ளி குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும் பள்ளியின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்த ஆசிரியர் சின்னக்கண்ணுவை மாற்றக்கூடாது என்றும் அவரது பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கோரிக்கையை முன்வைத்தனர்.

ஆசிரியரை பணிமாற்றம் செய்யக்கூடாது எனவும், அவர் தங்கள் பள்ளியிலேயே பணியாற்ற வேண்டும் எனவும், இல்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து அவரது பணி மாறுதல் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.