PDK Collector Mercy Ramya PT Desk
தமிழ்நாடு

புதுக்கோட்டை ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை உடைந்ததா? - மாவட்ட நிர்வாகம் விளக்கம்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலை அப்புறப்படுத்தப்பட்டதாக சமூக வலைதளத்தில் பரவிய தகவல், திட்டமிட்ட வதந்தி என்று ஆட்சியர் எடுத்துரைத்ததால் போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் திரும்பிச் சென்றனர்.

PT WEB

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா கடந்த மாதம் 22ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் புதுக்கோட்டை திருமயம் சாலையில் உள்ள ஆட்சியருக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள முகாம் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியேறினார்.

இந்நிலையில் ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலை அப்புறப்படுத்தப்பட்டதாகவும், அப்படி அப்புறப்படுத்தும் பொழுது சிலை உடைந்து விட்டதாகவும், ஆட்சியர் மெர்சி ரம்யா மதரீதியில் விநாயகர் சிலையை அகற்றியது கண்டனத்துக்குறியது என்றும் சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.

இந்த தகவலையடுத்து பாஜக, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய இந்து அமைப்புகள் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். தொடர்ந்து ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பு குவிந்தனர். இதையொட்டி காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். பின் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இருப்பதை அறிந்த பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள், அவரை நேரில் சந்தித்தனர். அப்போது ஆட்சியர் மெர்சி ரம்யா, ‘மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலை அகற்றப்படவில்லை. திட்டமிட்டு யாரோ சமூக வலைதளத்தில் வதந்தியை பரப்பி உள்ளனர்’ என அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

Pudukkottai collector office

மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அதில் “புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலொன்று வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொண்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. இந்த வதந்தி அரசியலமைப்பு சட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம் கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது.

இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என கூறப்பட்டுள்ளது. இத்துடன் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள விநாயகர் சிலையின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் எதுவும் நடத்தாமல் கலைந்து சென்றனர். இருப்பினும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Pudukkottai collector office

அதேநேரம் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த சிலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த சிலையை அதே இடத்தில் வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.