தமிழ்நாடு

“வார இறுதி நாட்களில் மட்டும் டிராபிக் போலீசாருக்கு டி-சர்ட்” - புதுச்சேரி காவல்துறை

“வார இறுதி நாட்களில் மட்டும் டிராபிக் போலீசாருக்கு டி-சர்ட்” - புதுச்சேரி காவல்துறை

webteam

புதுச்சேரியில் போக்குவரத்து காவலர்களுக்கு வார இறுதி நாட்களில் டி-சர்ட் அணிந்து பணியாற்றும் வகையில் புதிய சீருடையை அம்மாநில காவல்துறை வழங்கியுள்ளது. 

இரவு பகல் பார்க்காமல், அதிக விடுமுறையில்லாமல் அயராது வேலைப்பார்த்து வருபவர்கள் காவல்துறையினர். ஆட்கள் பற்றாக்குறையால் ஆங்காங்கே அதிக நேரம் பணியாற்றக்கூடிய சூழலும் நிலவுவதாக சிலர் கூறுகின்றனர். வேலைப்பளு அதிகரிப்பதால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் போலீசார் குற்றம் சாட்டி வந்தனர். 

இதனிடையே, போலீசாரின் சீருடையும் மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கோடை காலங்களில் சொல்லவே வேண்டாம். அதுவும் போக்குவரத்து போலீசார் சாலையில் நிற்பதே கடினம். அதிலும் கடிமான துணிகளால் தைத்த உடையை அணிந்து கொண்டு வெயிலில் நிற்பது இன்னும் சிரமம். இதனாலும், அவர்களுக்கு மன அழுத்தம் கூடுகிறது. இந்த கோபத்தை சில நேரங்களில் பொதுமக்களிடம் காண்பிக்கும் அவலநிலையும் ஏற்படுகிறது. 

இந்நிலையில், போலீசாருக்கு புதிய சீருடையை புதுச்சேரி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது புதுச்சேரி போக்குவரத்தில் பணிபுரியும் போலீசார் வெள்ளை சட்டை மற்றும் பேன்ட் கொண்ட சீருடையை அணிந்து வருகின்றனர். ஆனால் வார இறுதி நாட்களில் அதாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்கள் டி-சர்ட் அணிந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சீருடையான டி-சர்ட், பேண்ட் போலீசாருக்கு புதிய புத்துணர்வை ஏற்படுத்தும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வதால், அவர்கள் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரை அச்சமின்றி அணுகி சுற்றுலா இடங்கள் குறித்த விபரங்களை கேட்க முடியும் என்றும் கூறுகின்றனர்.