ஹேமசந்திரன் pt web
தமிழ்நாடு

உடல் பருமனைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் மரணம்.. சுகாதாரத்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன?

சென்னையில் உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்த இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் சுகாதாரத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்...

PT WEB

புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஹேமச்சந்திரனுக்கு கடந்த 22ஆம் தேதி சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது உடல்நிலை மோசம் அடைந்த நிலையில், பல்லவரத்தில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமச்சந்திரன், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் ஹேமசந்திரனின் தந்தை புகார் அளித்ததின்பேரில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

அறுவை சிகிச்சை மேற்கொண்ட பம்மல் தனியார் மருத்துவமனை மருத்துவர், உதவியாளரிடம் விசாரணை நடைபெற்றது. கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்ததால் இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறையும் களத்தில் இறங்கியது.

பம்மல் தனியார் மருத்துவமனையில், சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில், இளைஞருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், பயன்படுத்தப்பட்ட மருந்துகள், மயக்க மருந்து கொடுத்த மருத்துவர் யார் உள்ளிட்ட விவரங்களை மருத்துவக் குழுவினர் கேட்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பல்லாவரம் தனியார் மருத்துவமனையிலும் விசாரணை நடத்தினர். உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை முறையாக மேற்கொள்ளப்பட்டதா? என்ற கேள்வி எழுவதுடன், இது மருத்துவ துறையால் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையா என்பதும் கேள்விக்குள்ளாகி உள்ளது.

தனியார் மருத்துவமனையில் அரசு மருத்துவ குழு நடத்திய விசாரணை என்ன ஆனது?, இளைஞரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பதை மருந்துவக்குழு கண்டறிந்ததா என்பதும் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

இந்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து விளக்கங்களை புதிய தலைமுறை முயற்சி மேற்கொண்டது. ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தினர் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

சுகாதாரத்துறையினர் அவ்வப்போது மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.