தமிழ்நாடு

பட்டமளிப்பு விழாவில் வழங்கிய தங்கப்பதக்க‌த்தை ஏற்க மறுத்த மாணவி

பட்டமளிப்பு விழாவில் வழங்கிய தங்கப்பதக்க‌த்தை ஏற்க மறுத்த மாணவி

webteam

குடியரசுத் தலைவர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ராபிஹா என்ற மாணவி தனது தங்கப்பதக்க‌த்தை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்‌‌.

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் ‌நடைபெற்ற 27 ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் பத்து பேருக்கு தங்கப்பதக்கங்களை வழங்கி உரையாற்றிய குடியரசுத்தலைவர், பெண்கள் அதிகளவில் தங்கப்பதக்கம் மற்றும் பட்டம் பெற்றுள்ளது எதிர்கால இந்தியாவை பிரதிபலிப்பதாக கூறினார்.

குடியரசுத்தலைவர் உள்ளிட்டோர் சென்ற பின், அந்தந்த துறைத் தலைவர்கள் மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினர். அப்போது, முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற ராபிஹா அப்துர்ரஹீம் என்ற மாணவி தனக்கான தங்கப்பதக்கத்தை ஏற்க மறுத்தார். குடியரசுத்தலைவர் சென்றபின்பே தாம் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பதக்கத்தை நிராகரிப்பதாக அவர் தெரிவித்தார்

மாணவியின் செயலால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக தொடரும் போராட்டம்‌ காரணமாக பட்டம் வாங்க வந்த மாணவர்கள் அனைவரும் வழக்கத்திற்கு மாறாக தீவிர சோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டார்கள். போலீசாரும் பட்டம் பெறும் அங்கி உடை அணிந்து மாணவர்களுடன் கலந்து அமர வைக்கப்பட்டிருந்தனர்.