தமிழ்நாடு

புதுச்சேரி எஸ்.ஐ. தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. குடும்பத்திற்கு நிதியுதவி 

புதுச்சேரி எஸ்.ஐ. தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. குடும்பத்திற்கு நிதியுதவி 

webteam

புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல்நிலைய எஸ்.ஐ. விபல் குமார் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு நாட்டில் உள்ள சிறந்த 10 காவல்நிலையங்களில் புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தை 4-வது காவல்நிலையமாக தேர்வு செய்து விருது வழங்கியது. இந்த நிலையில் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் நேற்று முன் தினம் காலை காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் காவல் துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதைத்தொடர்ந்து விபல்குமாரின் தந்தை பாலு கூறுகையில், “என்னுடைய மகன் மிகவும் நேர்மையான காவல் அதிகாரி. அவருக்கு காவல் நிலையத்தில் பணியாற்ற கூடிய ஆய்வாளர் கலைச்செல்வன் என்பவர் பல்வேறு விதமான வகையில் நெருக்கடிகள் கொடுத்ததன் காரணமாக இந்த மர்ம மரணம் நடைபெற்றுள்ளது. 

விபல்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை. இது திட்டமிட்ட கொலை. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எனது மகன் மரணத்திற்கு காரணமான ஆய்வாளர் கலைச்செல்வன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல்நிலைய எஸ்.ஐ. விபல் குமார் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும், எஸ்.ஐ. விபல் குமார் தற்கொலை வழக்கை நேர்மையாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி மற்றும் அவரது மனைவிக்கு அரசுவேலை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.