தமிழ்நாடு

இனிமேல் நீட் மூலமே மாணவர்கள் சேர்க்கை - புதுச்சேரி ஜிப்மர் அறிவிப்பு

இனிமேல் நீட் மூலமே மாணவர்கள் சேர்க்கை - புதுச்சேரி ஜிப்மர் அறிவிப்பு

webteam

2020 ஆம் கல்வி ஆண்டு முதல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியிலும் நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும். ஆனால் மத்திய அரசுக்கு சொந்தமான எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் ஆண்டுதோறும் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.

எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் கல்லூரிகளுக்கு மட்டும் தனியாக நுழைவுத் தேர்வு நடத்துவது அதிக செலவையும், பல்வேறு நடைமுறை சிக்கல்களையும் ஏற்படுத்துவதாக கூறப்பட்டது. அதேபோல் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி, ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் வரும் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் 150 மற்றும் காரைக்கால் ஜிப்மர் கிளையில் 50 என மொத்தம் 200 எம்பிபிஎஸ் சீட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.