தமிழ்நாடு

வேகமாக பரவி வரும் ஃபுளூ காய்ச்சல்.. புதுவையில் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

வேகமாக பரவி வரும் ஃபுளூ காய்ச்சல்.. புதுவையில் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

webteam

புதுச்சேரியில் புளூ காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் ஒரு வாரத்திற்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சிறியவர், பெரியவர் என அனைத்து தரப்பினரும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சலை கட்டுபடுத்த புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென சுகாதாரத்துறை இயக்குனர், புதுச்சேரி கல்வித்துறை இயக்குனருக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், சுகாதாரத்துறை அறிவுறுத்தலை ஏற்று, நாளை 17.09.2022 முதல் வரும் 25.09.2022 ஆம் தேதி வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், வைரஸ் காய்ச்சலை கட்டுபடுத்த வேண்டும் என்பதற்காக நாளை முதல் வரும் 25ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் 26ந்தேதி முதல் காலாண்டு தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.