சிங்கப்பூர் தமிழ் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி ரூ.72 லட்சம் மோசடி செய்த புதுக்கோட்டையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை வசந்தம் நகரை சேர்ந்தவர் சோலை கணேஷ் (36). இவருக்கு சென்னையை சேர்ந்த சீதாலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் கணேஷ்க்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்தையடுத்து அங்கு சென்றுவிட்டார். சிங்கப்பூரில் வசிக்கும் மலேசிய தமிழ் பெண்ணான சங்கீதாவுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாற கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கணேஷ் திருமணமானவர் என்பது சங்கீதாவுக்கு தெரியாது. இந்நிலையில் வீடு , நிலங்கள் வாங்க வேண்டும் எனக்கூறி சங்கீதாவிடம் இருந்து ரூபாய் 72 லட்சம் பெற்றுள்ளார். சங்கீதாவுடன் தங்கியிருந்த கணேஷ் தனது சொந்த ஊருக்கு சென்று வருவதாகக் கூறி இந்தியா திரும்பிவிட்டார்.
புதுக்கோட்டை வந்த கணேஷ் இங்கு மூன்றாவது திருமணம் செய்துள்ளார். சொந்த ஊர் சென்ற கணவன் திரும்பததால் சங்கீதா சந்தேகமடைந்துள்ளார். பின்னர் தான் கணேஷுக்கு ஏற்கெனவே திருமணமானவர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. இந்தியா வந்த சங்கீதா இதுதொடர்பாக புதுக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரில் கணேஷ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு தன்னிடம் 72.82 லட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேஷை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சோலை கணேஷின் தாய் ,சகோதரர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.