தமிழ்நாடு

வெள்ள நீரை ஏரிகளுக்கு மடைமாற்றம் செய்யும் பொதுப்பணித் துறையினர்: மகிழ்ச்சியில் விவசாயிகள்

வெள்ள நீரை ஏரிகளுக்கு மடைமாற்றம் செய்யும் பொதுப்பணித் துறையினர்: மகிழ்ச்சியில் விவசாயிகள்

kaleelrahman

பாலாற்றின் வெள்ள நீரை 324 ஏரிகளுக்கு மடைமாற்றம் செய்யும் பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது. இதனால் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுவதாக விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. பாலாற்றில் நீர்வரத்து அதிகமான காரணத்தினால் காவேரிபாக்கம் அணைக்கட்டிலிருந்து சுமார் 324 ஏரிகளுக்கும் நீரை மடைமாற்றம் செய்யும் பணியில் பொதுப்பணித் துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

பாலாற்றில் தண்ணீர் வந்தவுடன், வீணாக கடலில் கலக்காமல், அருகில் உள்ள ஏரிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் நிரப்பும் பணியை, பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டிருப்பது விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இம்முறையும் கால்வாய்கள் மூலமாக, ஏராளமான ஏரிகளை நிரப்பி உள்ளனர். குறிப்பாக, காவேரிப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து பாலாற்றின் இருபுறமும் பிரியும், மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம், சக்கரமல்லூர், தூசி ஆகிய நான்கு கால்வாய் மூலம், 324 ஏரிகளை நிரப்புகின்றனர்.

பாலாறு மூலம், இந்தாண்டு ஏராளமான நீர்நிலைகள் முழுதுமாக நிரம்பியுள்ளன. மேலும் அதீத கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுமார் 450க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் - 170 ஏரிகள் 100 சதவீதமும், 147 ஏரிகள் 75 சதவீதமும், 34 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 315 ஏரிகள் 100 சதவீதமும், 158 ஏரிகள் 75 சதவீதமும், 53 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன. தற்போதைய நிலவரப்படி பாலாற்றில் 15 ஆயிரம் கனஅடி நீர் செல்வதால், காஞ்சிபுரம் அருகில் உள்ள செவிலிமேடு தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ள நீர் செல்கிறது.