தமிழ்நாடு

தடுப்பு சுவர் இல்லாத ‘அபாய பாலம்’ - அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்

தடுப்பு சுவர் இல்லாத ‘அபாய பாலம்’ - அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்

webteam

நாகையில் தடுப்புச் சுவர் இல்லாத ஆற்றுப் பாலத்தில் மக்கள் நாள்தோறும் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோவில் அருகிலுள்ள அய்யாவையனாறு ஆற்றின் குறுக்கே 1972ஆம் ஆண்டு
பாலம் கட்டப்பட்டது. பல்வேறு கிராமங்களிலிருந்து பள்ளி செல்வதற்கு மாணவர்கள் இந்த பாலத்தை தான் பயன்படுத்துகின்றனர். இந்த
ஆற்று பாலத்தில் 30 வருடத்திற்கு மேலாக மயிலாடுதுறையிலிருந்து கீழையூர் மார்க்கத்தில் அரசு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பாலத்தில் இருபக்கமும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி பெயர்ந்து விழுந்தது. 

இதனால் 5 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களும், பொதுமக்களும் பெரும் அச்சத்துடன் பாலத்தை கடந்து செல்கின்றனர். பேருந்துகள்
பள்ளி வாகனங்கள் பாலத்தை கடக்கவும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் அபாயகரமான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து
ஊராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டதற்கு, பாலப்பணி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறினர்.
பொதுப்பணித்துறையினர் கேட்டபோது, ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்தனர்.