தமிழ்நாடு

கோடைகாலத்தில் வீணாக்கப்படும் குடிநீர்: பொதுமக்கள் வேதனை

கோடைகாலத்தில் வீணாக்கப்படும் குடிநீர்: பொதுமக்கள் வேதனை

webteam

கோடை காலம் நெருங்க உள்ள நிலையில் தமிழகத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கோவை பேரூர் அருகே போஸ்டல் காலனி பகுதியில் உள்ள சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் குடி தண்ணீர் சாலையில் வீணாகியுள்ளதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சுகுணாபுரம் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் போது, சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இரவு முதல் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் சாலையை கடப்பதற்கு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். கோடை காலம் நெருங்கியுள்ள நிலையில் இவ்வாறு குடிநீர் வீணாகி வருவதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்துள்ளனர். 

இதனிடையே அரியலூர் மாவட்டம் திருமழபாடி பகுதியில் கடந்த 3 மாதங்களாக தண்ணீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், 3 என்ஜின் திறன் அளவிற்கு தண்ணீர் வீணாகி வருவதாக கூறுகின்றனர். இந்தத் தண்ணீரை கொண்டு 40 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்தக் குழாய் உடைப்பால் பல கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.