தமிழ்நாடு

முதலீடு செய்த பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றுவதாக பொதுமக்கள் முற்றுகை

முதலீடு செய்த பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றுவதாக பொதுமக்கள் முற்றுகை

webteam

முதலீடு செய்த பணத்தை திருப்பித் தரமால் ஏமாற்றுவதாகக் கூறி கோவில்பட்டி அமுதசுரபி கிளையை பொதுமக்கள் இரவில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாதங்கோவில் சாலையில் அமுதசுரபி என்ற நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இதில் 280-க்கும் மேற்பட்டோர்; வாடிக்கையாளர்களாக உள்ளனர். இங்கு தினம், வாரம், மாதந்தோறும் என வாடிக்கையாளர்களிடம் இந்த நிறுவனம் பணம் வசூல் செய்து வந்ததுள்ளது. மேலும் குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் அதற்கான பணத்தினை திருப்பித் தந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை இந்த நிறுவனம் திருப்பி தரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இதே போன்று தமிழகத்தில் உள்ள பிற அமுதசுரபி கிளை நிறுவனத்திலும் இதே பிரச்னை ஏற்பட்டு பொதுமக்கள் புகார் அளித்துள்ள நிலையில், கோவில்பட்டியில் உள்ள வாடிக்கையாளர்களும் தங்களுடைய பணத்தை திருப்பிக் கேட்டு நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இந்நிலையில் இன்றிரவு அமுதசுரபி நிறுவனத்தில் வாடிக்கையாளராக இருந்து பணம் செலுத்திய பலரும் நிறுவனத்தை முற்றுகையிட்டு தங்களுடைய பணத்தினை உடனடியாக தர வேண்டும் என்று கூறி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பணத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இருந்த போதிலும் தங்களது பணத்தை உடனடியாக பெற்றுத் தரும்படி வாடிக்கையாளர்கள் கேட்டனர். இப்பிரச்னை தொடர்பாக பொருளதார குற்றப்பிரிவில் முறையாக புகார் அளிக்கும் படி போலீசார் முற்றுக்கையிட்டுவர்களிடம் அறிவுறுத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.