உரிய சிகிச்சை அளிக்காததால் பிரசவத்திற்கு பிறகு தாயும், சேயும் அடுத்தடுத்து உயிரிழந்ததாகக் கூறி, பச்சிளம் குழந்தையின் சடலத்துடன் ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி மகேஸ்வரி இரண்டாவது பிரசவத்திற்காக காங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக மேல்சிகிச்சைக்காக முதலில் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு மகேஸ்வரியை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பப்பையில் தொற்று உள்ளதாகக்கூறி, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்டு மகேஸ்வரி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது பச்சிளம் பெண்குழந்தையும் இன்று உயிரிழந்துள்ளது. தொடர்ந்து தாயும், சேயும் உயிரிழந்ததால் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆரம்பத்திலிருந்தே உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் விவரத்தை கேட்டும் பச்சிளம் குழந்தையின் சடலத்துடன் மகேஷ்வரியின் உறவினர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் காங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்து வந்த கே.வி.குப்பம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நாளைக்கு மகேஸ்வரியின் மருத்துவ ஆவணங்களை வாங்கித்தருவதாக உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். மகேஸ்வரிக்கு அதிகப்படியான தைராய்டு பிரச்னை இருந்ததாகவும், அதன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் ஆரம்ப சுகாதார நிலையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.