தமிழ்நாடு

அவலநிலையில் திருவாரூர் பேருந்து நிலையம் - விரைந்து சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

அவலநிலையில் திருவாரூர் பேருந்து நிலையம் - விரைந்து சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

Sinekadhara

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் அமையப்பெற்றுள்ள திருவாரூர் நகரப் பேருந்து நிலையம், சிறுமழைக்கே தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. 1976-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது திருவாரூர் பழைய பேருந்து நிலையம். ஆரம்ப காலத்தில் இந்தப் பேருந்து நிலையத்திலிருந்துதான் நகரப் பேருந்துகளும், பிற மாவட்டங்களுக்கு செல்லும் பொது பேருந்துகளும் இயங்கும். பொது போக்குவரத்திற்காக புதிய பேருந்து நிலையம் ஆறு மாதத்திற்கு முன்னதாக பயன்பாட்டுக்கு வந்தது. அங்கிருந்து மன்னார்குடி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. புது பேருந்து நிலையம் அமையப் பெற்றதால் தற்போது பழைய பேருந்து நிலையம் நகரப் பேருந்து நிலையமாக இயங்கி வருகிறது. இங்கிருந்து நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கிவருகின்றன.

நாளொன்றுக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நகரப்பேருந்து நிலையம் மிகவும் சுகாதாரமற்ற முறையில் காட்சியளிக்கிறது. நகராட்சி கட்டண கழிப்பிட மேற்கூரை மோசமாக இடியும் தருவாயில் உள்ளது. தற்போது அது பலரும் மது அருந்த தகுந்த இடமாக இருக்கிறது. இந்தப் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் மதுக் குடிப்போர், மது அருந்தும் காட்சி பெண்களை முகம் சுளிக்க வைக்கிறது.

மேலும், பேருந்து நிலையம் முழுவதும் உள்ள சாலைகள் முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக அடிக்கடி விபத்து ஏற்படும் இடமாக திகழ்கிறது. இங்கு தேங்கிய மழை நீர் வடியாமல் புழுக்கள் உற்பத்தியாகி இருக்கிறது. பாதாள சாக்கடை சுத்தம் செய்யப்படாததால் பெய்கின்ற மழைநீர் முழுவதுமாக தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மொத்தத்தில் குப்பைக்கூளமாக திருவாரூர் நகர பேருந்து நிலையம் மாறியிருக்கிறது. எனவே அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து சாலைகளை செப்பனிட்டு, சுகாதாரமான முறையில் பேருந்து நிலையம் இயங்க வேண்டும் என பயணிகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.