தமிழ்நாடு

கடலூர்: தண்ணீரில் இறங்கி போராட்டம் நடத்திய பொதுமக்கள்-நீருக்குள் பாம்பு வந்ததால் பரபரப்பு

கடலூர்: தண்ணீரில் இறங்கி போராட்டம் நடத்திய பொதுமக்கள்-நீருக்குள் பாம்பு வந்ததால் பரபரப்பு

kaleelrahman

திட்டக்குடி அருகே தரை பாலத்தை சீரமைக்கக் கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஓடும் தண்ணீரில் இறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது தண்ணீரில் பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த நாவலூர் கிராமத்தில் உள்ள ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக சாத்தநத்தம், ஆலங்குடி வழியாக திட்டக்குடி ,கடலூர் செல்ல மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் மழைக் காலங்களில் தரை பாலத்தின் மீது அதிக அளவு தண்ணீர் செல்வதால் அந்த வழியை பொதுமக்கள் பயன்படுத்தாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மேம்பாலம் அமைக்கக் கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இன்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஓடும்ஓடை நீரில் இறங்கி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது, தரை பாலத்தை மேம்பாலமாக அமைத்துத்தர வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில், அங்கு வந்த மங்களூர் வட்டார அலுவலர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடன்பாடு ஏற்படாத நிலையில், தொடர்ந்து ஓடும் தண்ணீரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓடும் தண்ணீரில் பாம்பு மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.