மூடப்பட்ட டாஸ்மாக் கடை PT WEB
தமிழ்நாடு

”மூடும் வரை கலைந்து செல்ல மாட்டோம்” - ஒரே நாளில் டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் போராட்டம்!

பெரம்பலூரில் பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடைய மூடி சென்றனர்.

webteam

பெரம்பலூர் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ஜமாலியா நகர்ப் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடைக்கு அருகில் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் மது அருந்த வரும் நபர்களால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வந்துள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அரசு மதுபான கடையை மூட கோரி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த, பெரம்பலூர் போலீசார்,பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், மதுபான கடையை மூடும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று உறுதியுடன் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

பின்னர் இது குறித்துத் தகவலறிந்து வந்த, பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் சரவணன் மற்றும் டாஸ்மாக் நிர்வாக மேலாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பொதுமக்கள் ஒத்துழைப்பு தராததால் வேறு வழியின்றி டாஸ்மாக் கடையை மூடும் முடிவிற்கு வந்தனர்‌.

போராட்டத்தில் மக்கள்

இதனையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது.தொடர் போராட்டத்தினால் டாஸ்மாக் மூடப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.