70 மணி நேர வேலை குறித்து மக்கள் pt web
தமிழ்நாடு

“கார்ப்பரேட்டுகள் கீழேயே இளைஞர்கள் இருக்க வேண்டுமா?” நாராயணமூர்த்தி கருத்து குறித்து பொதுமக்கள்

“அலுவலக வசதிகளை வீணாக்காதீர்கள் என சொன்னவர் 20 வருடங்களில் மாறிவிட்டார்”- நாராயண மூர்த்தி பேச்சு குறித்து மக்கள் கருத்து

Angeshwar G

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி பாட்காஸ்ட் ஒன்றில், இன்றைய இளைஞர்கள் 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் எனக் கூறியது இப்போது வரை விவாதத்தில் உள்ளது. இந்த கருத்து குறித்து மக்களது மனநிலையை அறிந்து கொள்வதற்காக pt prime யூடியூப் சார்பில் மக்களிடம் கேட்டோம்.

அவர்கள் கூறியதாவது,

நபர் 1: அவர் காலக்கட்டத்தில் அவர் உழைத்தார், ஆனால் இவ்வளவு நேரம் உழைத்தாரா என தெரியவில்லை. அவர் சொல்வது 70 மணி நேரம். தற்போதயை வேலை நேரத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். நிறுவனம் இரட்டை சம்பளம் கொடுக்குமா? நாடு முன்னேற வேண்டும் சரி; தொழிலாளர்கள் சாப்பிட வேண்டாமா? அவர் 6 முதல் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். குடும்பத்தோடு செலவழிப்பது 5 முதல் 7 மணி நேரம் ஆகிவிடும். அவர்கள் மிஷினா? மனிதரா?

நபர் 2: குடும்ப வாழ்க்கை என்று ஒன்று உள்ளதுதானே.. குடும்பம் என்ற ஒன்றிற்குள் சென்றுவிட்ட பிறகு குடும்பத்தை பார்க்காமல் 70 மணி நேரமோ அல்லது 100 மணி நேரமோ உழைத்து என்ன செய்யப் போகிறோம். நாராயணமூர்த்தி மாதிரி 70 வயது ஆன பின் அறிவுரை சொல்வதற்கு வாழ்க்கையை வாழ்ந்துவிடலாமே. கஷ்டப்படுகிறவன் எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு நாள் தான் வேலை செய்கிறாரா என்ன?

இதே நாராயண மூர்த்தி 10, 15 ஆண்டுகளுக்கு முன் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். வேலை இல்லாத நேரத்தில் அலுவலகத்தில் உட்கார்ந்து அலுவலக வசதிகளை வீணாக்காதீர்கள் என சொன்னார். அதே நாராயண மூர்த்தி 70 மணி நேரம் வேலை செய்யுங்கள் என சொல்கிறார். 20 வருடத்தில் இவர் என்ன கற்றுக்கொண்டார் என்பது தான் எனக்கு தெரியவில்லை.

நபர் 3: 70 மணி நேரம் வேலை பார்த்தால் இந்தியா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதெல்லாம் சரிதான். ஆனால் குடும்பத்தை பார்க்க வேண்டுமே, நாம் வாழ்வதற்குத்தானே வேலை. வேலைக்காக வாழ்க்கையை கொடுப்பதென்பது சரியாக தெரியவில்லை.

நபர் 4: அவர் மிகப்பெரிய பொருளாதார வல்லுநர். அவர் சொல்லுவதில் உடன்பாடு இருந்தாலும் கூட இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு 70 மணி நேரம் உழைப்பது என்பது உடலுக்கு ஒத்து வராது. 50 மணி நேரம் என்ற விழுக்காடோடு பார்த்தோமேயானால் அவர்கள் தேக ஆரோக்கியத்தோடு இருப்பார்கள்.

நபர் 5; அவர் ஏன் 70 மணி நேரம் வேலை செய்யுங்கள் என சொல்கிறார் என தெரியவில்லை. அனைவரும் பிஸ்னஸ் தொடங்குங்கள். அதனால் இந்தியாவின் பொருளாதாரம் அதிகமாகும் என சொல்லி இருக்கலாமே. இளைஞர்களை எப்போதும் ஏதேனும் வேலைக்குதான் அனுப்ப பார்க்கிறார்கள். சொந்தமாக தொழில் தொடங்க அறிவுறுத்த மாட்டேன் என்கிறார்கள். கார்ப்பரேட்டுகளின் கீழேயே இளைஞர்கள் இருக்க வேண்டும், வேலை பார்க்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.