தமிழ்நாடு

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மனிதர்களைப்போல் இறுதிச்சடங்கு!

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மனிதர்களைப்போல் இறுதிச்சடங்கு!

Sinekadhara

மதுரையில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மனிதரைப்போல இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் திடீர்நகர் பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமாக அப்பகுதி மக்கள் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வாங்கி வளர்த்துள்ளனர். ஜல்லிக்கட்டு ’காளைக்கு மருது’ என பெயரிட்டு கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு, கரடிக்கல், ஜல்லிக்கட்டு போட்டிகளிலும், தேனி மாவட்டம் பல்லவராயன் பட்டி ஜல்லிக்கட்டு, திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை இந்த காளை பெற்றுள்ளது.

கோவில் காளை என்பதால் அப்பகுதி மக்கள் அனைவரும் இதற்கு தனி மரியாதை கொடுப்பார்கள். இந்நிலையில், உடல்நலக்குறைவால் காளை மருது நேற்று திடீரென உயிரிழந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இறந்த கோவில் காளைக்கு பால், இளநீர், மஞ்சள் போன்ற பொருள்களால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மஞ்சள் கலந்த தண்ணீர் மற்றும் பாலால் காளையின் காலை சுத்தம்செய்து, அதன் பின்னர் தலை, நெற்றி, கால் ஆகியவற்றில் சந்தனம், குங்குமம் வைத்த பின் கம்பு போட்டு மரியாதை செய்து வழிபட்டனர்.

இதனையடுத்து மனிதர்களுக்கு நடத்தப்படுவது போல் உயிரிழந்த கோவில் காளைக்கும் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு காளை அடக்கம் செய்யப்பட்டது. கோவில் காளையான மருது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், மக்கள் ஒன்றுகூடி கோவில் காளையை சகல மரியாதையோடு அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.