தமிழ்நாடு

‘சிறையில் இருந்த மாதத்திற்கும் அரசு மருத்துவருக்கு சம்பளம்’ - புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்

‘சிறையில் இருந்த மாதத்திற்கும் அரசு மருத்துவருக்கு சம்பளம்’ - புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலம்

webteam

வங்கி மோசடி வழக்கில் 41 ஆண்டுகள் தண்டனை பெற்ற அரசு மருத்துவக்கல்லூரி இணைப்பேராசிரியர் சிறையில் இருந்த காலத்துக்கும் ஊதியம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

2004 - 2006ஆம் ஆண்டு காலத்தில் மதுரை மேலமாசி வீதியில் உள்ள கார்ப்பரேஷன் வங்கிக் கிளையில் ராஜவேலு என்பவர் உள்பட 11 மருத்துவர்கள் தாங்கள் நடத்தும் க்ளீனிக்குக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும் எனக்கூறி கடன் பெற்றுள்ளனர். போலியான ஆவணங்களை கொடுத்து கார்ப்பரேஷன் வங்கி மேலாளர் குமார் என்பவரின் உதவியுடன் கடன் பெறப்பட்டுள்ளது. 11 பேருக்கும் மொத்தம் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவர் ராஜவேலு இரண்டு தவணைகளாக 14.94 லட்சம் கடன் பெற்றுள்ளார். 11 பேரில் 9 பேர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இந்த மோசடி தொடர்பாக வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. 

வங்கி மோசடி வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ராஜவேலு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.டி. தடயவியல் மருத்துவப் படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்றுள்ளார். அதன்பின் அதே கல்லூரியில் தடயவியல் துறையில் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு குற்ற வழக்குகளில் உயிரிழந்தவர்களின் உடலை கூராய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார். 

இந்த நிலையில் வங்கி மோசடி வழக்கை விசாரித்த மதுரை சிபிஐ நீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் ஐந்தாவது குற்றவாளியான ராஜவேலுவுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் தலா 7 மற்றும் 10 ஆண்டுகள் என மொத்தம் 41 வருடங்கள் தண்டனை விதிக்கப்பட்டு அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி உதவிப் பேராசிரியரான ராஜவேலு சிறையில் அடைக்கப்பட்டார். 

அரசு ஊழியர் ஒருவர் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என நன்னடத்தை விதி கூறுகிறது. ஆனால் ராஜவேலு சிறையில் அடைக்கப்பட்டும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் பெற்று வெளியே வந்த அவருக்கு இணைப் பேராசிரியராக பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. ராஜவேலுவின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில் அவர் தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இணைப்பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

இதுஒருபுறமிருக்க சிறையில் இருந்த இரண்டு மாத காலத்துக்கு ராஜவேலு ஊதியம் பெற்றிருப்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. வங்கி மோசடி வழக்கில் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி ராஜவேலுவுக்கு 41 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதிதான் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இடைப்பட்ட ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் ராஜவேலு சிறையில் இருந்துள்ளார். 

ஆனால் அந்த இரண்டு மாதங்களுக்கும் அவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயை ஊதியமாக அரசு வழங்கியுள்ளது. அதைக் குறிப்பிட்டு ராஜவேலு வருமானவரி கணக்கும் தாக்கல் செய்துள்ளார். செய்த வேலைக்கு ஊதியம் கிடைக்காமல் பலர் தவித்து வரும் நிலையில் சிறையில் இருந்த ராஜவேலுவுக்கு அரசு ஊதியம் வழங்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.