தமிழக பாஜகவில் ஒரு சிலரை தவிர மற்றவர்களை வளரவிட மாட்டார்கள் என திமுகவில் இணைந்த அரசகுமார் தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டையில் நடந்த திமுக நிர்வாகி திருமண விழாவில் பங்கேற்று பேசிய பி.டி.அரசகுமார், எம்.ஜி.ஆர்-க்கு பின்னர் தான் ரசித்த ஒரு தலைவர் ஸ்டாலின் தான் என பேசியிருந்தார். அத்துடன் “காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும் தளபதி அரியணை ஏறுவார்” எனவும் கூறியிருந்தார். இது பாஜகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று, அண்ணா அறிவாலயத்தில் மு.க .ஸ்டாலினை சந்தித்த அரசகுமார், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவில் இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி.
திருமண விழாவில் உண்மையை, யதார்த்தத்தை, நடைமுறையை பேசினேன். ஆனால் அதன் பின் என் வாழ்நாளில் காதுகொடுத்து கேட்க முடியாத அறுவறுக்கத்தக்க வார்த்தைகளை எல்லாம் கேட்டு மனச்சோர்வு அடைந்தேன்.
அந்தநேரத்தில் திமுகவினரின் அழைப்பின் அடிப்படையில் மன நிறைவுடன் திமுகவில் இணைந்துள்ளேன். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட இருக்கிறது. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய இருக்கிறது. அதற்கான எனது பயணம் தொடங்கியுள்ளது. என்னை வெளியேற்ற வேண்டும் என சிலர் நினைத்தனர். அவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி நிரந்தரம் இல்லை. தமிழக பாஜகவில் ஒரு சிலரை தவிர மற்றவர்களை வளரவிட மாட்டார்கள்.நான் பல பதவிகளை வகித்தவன். மானமுள்ள தமிழன். பதவிக்காக நான் மாறவில்லை என்று தெரிவித்தார்.