சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜயா கம்லேஷ் தஹில் ரமானி பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தஹில் ரமானிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு புதிய தலைமை நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் 3வது பெண் தலைமை நீதிபதி தஹில் ரமானி ஆவர்.
இந்நிலையில், தலைமை நீதிபதி பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அசியலமைப்பு படிநிலைகளை மீறி நீதிபதிகளுக்கு 5வது வரிசை ஒதுக்கப்பட்டதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழக அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு பின்னால் உள்ள வரிசைகள் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசு தலைமை வழக்கறிஞரிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், ஏற்பாடுகளை பார்வையிட நீதிமன்ற பதிவாளரை அனுமதிக்காத ஆளுனர் மாளிகை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
ஒரு புறம் நீதிபதிகளும், மறுபுறம் அமைச்சர்களும் இடம் ஒதுக்கப்படும் வழக்கமான நிலையை மாற்றி 5வது வரிசையில் அமர்த்தப்பட்டதது ஏன்? என விளக்கம் அளிக்க ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளார்.
சமீபத்தில் மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னுரிமை வழங்கியும், ஐகோர்ட்டு நீதிபதிகளை, தாசில்தார்களுடன் உட்கார வைத்த சம்பவமும் நடந்துள்ள நிலையில் இன்று மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அரசியலமைப்பு படிநிலை குறித்து ஆளுநர் மாளிகைக்கு தெரியாதா அல்லது அமைச்சர்களையும், காவல் அதிகாரிகளையும் விட நீதிபதிகள் கீழானவர்கள்தான் என புரிந்து கொண்டார்களா என நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் கேள்வி எழுப்பினர்கள்.