தண்ணீரில் இறங்கி போராட்டம் pt desk
தமிழ்நாடு

திருப்பத்தூர்: “வேண்டும் வேண்டும்.. பாலம் வேண்டும்” - பதாகைகளுடன் தண்ணீரில் இறங்கிய மாணவர்கள்!

திருப்பத்தூர் அருகே இடுப்பளவு தண்ணீரில் இறங்கி, “பாலம் வேண்டும்” என பதாகைகளை ஏந்தியபடி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் சிம்மனபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பாக்கம் காமராஜ்நாடு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மழைக்காலங்களில் ஏலகிரி மலையில் இருந்து மழைநீர் ஓட்டேரி டேம் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாற்றை சென்றடைகிறது. இதையடுத்து கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், ஓட்டேரி டேமில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அச்சத்துடன் தண்ணீரில் இறங்கி நடந்து செல்லும் மக்கள்

இதனால் அவ்வழியாகச் செல்லும் காமராஜ்நாடு பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள் மற்றும் அத்தியாவாசிய தேவைக்காக செல்லும் பொதுமக்கள் என அனைவரும் இடுப்பு அளவு தண்ணீரில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இறங்கி கடந்து செல்லும் அவலநிலை உள்ளது. ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளி சிறுமி ஒருவர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொதுமக்கள் மீட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அங்கு பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதிமக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளனர். ஆனால் அதன்மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் இன்று தண்ணீரில் இறங்கி பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.