தமிழ்நாடு

ஓராண்டில் ஓயாமல் போராட்டங்கள்: திக்குமுக்காடிய அதிமுக அரசு

ஓராண்டில் ஓயாமல் போராட்டங்கள்: திக்குமுக்காடிய அதிமுக அரசு

Rasus

அதிமுக அரசு ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் கடந்தாண்டில் பெரும்பாலான போரட்டங்களை எதிர்க்கொண்டு சமாளித்து இருக்கிறது.

ஜல்லிக்கட்டுக்காக மல்லுக்கட்டு:

2016 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது அதிமுக. டிசம்பர் 5 ல் ஜெயலலிதா மறைந்த நிலையில் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்காக சென்னையில் தொடங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியது. மதுரையில் வாடிவாசல் முன் விடாப்பிடியாக போராட்டம் தொடர அவர்களுக்கு வலுசேர்க்க சென்னையிலும் விடியவிடிய போராட்டம் நீடித்தது. இறுதியில் வெற்றி கிடைத்தாலும் காவல்துறையின் தடியடியுடன் போராட்டம் முடிக்கப்பட்டது.

வாடிவாசல் டூ நெடுவாசல்:

வாடிவாசல் திறக்கும் முன் வீடு வாசல் செல்லமாட்டோம் என்ற போராட்டத்திற்கு வெற்றி கிடைத்த நிலையில் அதே உத்வேகத்துடன் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் தொடங்கியது மக்கள் போராட்டம். புதுக்கோட்டை மாவட்டத்தில், வடகாடு, நல்லாண்டார்கோவில், நெடுவாசல் பகுதியை சேர்ந்த மக்கள் மக்கள் மீண்டும் போராட்டத்தைக் கையில் எடுத்துப்போராடினர். தமிழக அரசியல் தலைவர்கள் பலரும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல சவால்களை சந்தித்தது தமிழக அரசு.

மதுவுக்கு போராடிய பெண்கள்:

மதுவுக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் நிலையில் கோவை மாவட்டம், சாமளாபுரத்தில் போராடிய பெண்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தை வலுப்படுத்தினர். பின்னர் பெண்களைத் தாக்கிய சம்பந்தப்பட்ட டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு:

மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு, நீட் தேர்வு போன்ற விவகாரங்கள் மருத்துவர்களையும் போராட்டக்களத்திற்கு அழைத்த வந்தது. போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தப்போராட்டமும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியது.

20 ஆயிரத்துக்கும் மேலான போராட்டங்கள்:

மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டம்,டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய, குடிநீர்கேட்டு நடைபெறும் போராட்டம் என சிறிதும் பெரிதுமாக ஓராண்டு காலத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வரவில்லை என்றால் இதுபோன்ற போராட்டங்கள் தொடரத்தான் செய்யும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.