தமிழ்நாடு

மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுப்பு: 3-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது

மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுப்பு: 3-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது

Rasus

இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து ராமேஸ்வரத்தில் 3-ஆவது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

ராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சி மடம், மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ, சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்றார். தனுஷ்கோடி, ஆதம்பாலம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 4 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 22 வயதான பிரிட்ஜோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின்போது பிரிட்ஜோவின் உடலில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது.

உயிரிழந்த பிரட்ஜோவின் சடலம் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் ‌தற்போது வைக்கப்பட்டிருக்கிறது. அவரை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படையினரைக் கைது செய்து தமிழக சிறையில் அடைக்க வேண்டுமென்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என்ற உத்தரவாதத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் வந்து தெரிவிக்க வேண்டுமென்றும் அதுவரை பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி 3-வது நாளாக ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

தங்கச்சிமடம் மீனவர்களுக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் போராட்டக்களத்தில் இணைந்து வருகின்றனர். அவர்களுக்கு அங்கேயே உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.