தமிழ்நாடு

சிஏஏவுக்கு எதிராக சென்னையில் விடிய விடிய தொடரும் போராட்டம்..!

சிஏஏவுக்கு எதிராக சென்னையில் விடிய விடிய தொடரும் போராட்டம்..!

webteam

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் நேற்று போராட்டம் நடத்தினர். நீண்ட நேரம் போராட்டம் நீடித்ததால், கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காவல்துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாக 120 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து, பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதையடுத்து அங்கு சென்ற சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இஸ்லாமிய அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், காவல்துறையினரின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்களின் போராட்டம் நள்ளிரவைத் தாண்டியும் நீடித்தது.

ஒரு தரப்பினர் வண்ணாரப்பேட்டை மற்றும் பிராட்வேயில் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் திருவல்லிக்கேணி, பாரிமுனை, கிண்டி, ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட சென்னையின் பல இடங்களிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆங்காங்கே கடுமையா‌ன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது