தமிழ்நாடு

'உயர்கல்வியை ஊக்குவிக்கும்' - புதுமைப் பெண் திட்டத்தை பாராட்டிய அதிமுக எம்பி ரவீந்திரநாத்

'உயர்கல்வியை ஊக்குவிக்கும்' - புதுமைப் பெண் திட்டத்தை பாராட்டிய அதிமுக எம்பி ரவீந்திரநாத்

webteam

பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் திட்டம் என 'புதுமைப் பெண்’ திட்டத்தை அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வரவேற்று பாராட்டியுள்ளார்.

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்யவந்த அதிமுக எம்பி ரவீந்திரநாத் சாய்ரச்சை பூஜையில் கலந்துகொண்டு ராஜா அலங்காரத்தில் முருகனை தரிசனம் செய்தார். இதையடுத்து தங்கரதம் இழுத்து முருகனை வழிபட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதுமைப் பெண் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், ’’கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டத்தை வரவேற்கிறேன். இது போன்ற திட்டங்கள் பெண்களின் உயர்கல்வி படிப்பை ஊக்குவிக்கும். இந்த திட்டத்தை துவக்கிவைத்த தமிழக முதல்வருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

டிடிவி தினகரனுடன் இணைந்து பயணிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரவீந்திரநாத், ’’அதிமுகவில் இருந்து பிரிந்துசென்ற டிடிவி தினகரன், சின்னம்மா என வரக்கூடிய அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பது ஒருங்கிணைப்பாளரின் கருத்து. அதுவே எனது கருத்தும். வரக்கூடிய தேர்தலை அதிமுகவில் இருந்து பிரிந்துசென்ற அனைவரும் இணைந்து சந்திக்க வேண்டும்’’ எனக் கூறினார்.