University of madras pt desk
தமிழ்நாடு

சென்னை பல்கலைக்கழக வங்கிக் கணக்குகள் முடக்கம் - பேராசிரியர்கள் அலுவலர்கள் போராட்டம்... நடந்தது என்ன?

தமிழகத்தின் பழமையான சென்னை பல்கலைக்கழக வங்கிக் கணக்குகளை வருமானவரித் துறை முடக்கியதால் பல்கலைக்கழக நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்படாததால் பேராசிரியர்கள், அலுவலர்கள் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

webteam

செய்தியாளர்: சுரேஷ்குமார்

சென்னை பல்கலைக்கழகம் தென்னிந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் ஆகும். 167 ஆண்டுகள் பழமையான இந்த பல்கலைக்கழகம் தற்பொழுது நிதி சார்ந்த சிக்கலில் சிக்கித்தவிக்கிறது. சென்னை பல்கலைக்கழகம் ரூ.424 கோடி வருமான வரி செலுத்தவில்லை என்று கூறி பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகளை வருமானவரித் துறை கடந்த 6 ஆம் தேதி முடக்கியது.

சென்னை பல்கலைக்கழகம்

வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால், சென்னை பல்கலைக் கழகத்தின் நிதி சார்ந்த பணிகள் முடங்கியுள்ளது. மின்கட்டணம் மற்றும் தொலைபேசி கட்டணம்கூட செலுத்த முடியாததால் பல்கலைக் கழகத்தின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

வழக்கமாக மாதத்தின் இறுதி நாளில் வழங்கப்படும் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை பிப்ரவரி மாதத்தின் கடைசி நாள் வரை வழங்கப்படவில்லை. இதனால் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் கால வறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுக்கு சுமார் 90 கோடி ரூபாயை, சென்னை பல்கலைக் கழகத்திற்கு தமிழக அரசு மானியமாக வழங்க வேண்டும். ஆனால் தற்போது ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால்தான் சென்னை பல்கலைக்கழகம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

income tax

குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்தின் பதிவாளரின் கீழ் இருந்த வங்கிக் கணக்குகள் மட்டுமின்றி துறை சார்ந்த வங்கிக் கணக்குகள் மற்றும் மாணவர்கள் விடுதியின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அரசு முறையாக மானியம் வழங்காததால் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்படுவதை முடக்கியுள்ளது.

வருமானவரித் துறையும், அரசு பல்கலைக்கழகம் என்று தெரிந்தும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்திருப்பது மிகவும் வேதனையானது. ஆகவே அரசு பல்கலைக் கழகத்தின் செயல்பாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக நிதி தணிக்கையில் சில அதிருப்திகள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அந்த அதிருப்தி தெரிவித்த தொகையை விட்டு விட்டு மற்ற தொகையை அரசாங்கம் விடுவிக்க வேண்டும்.

Income Tax Raid

பல்கலைக்கழகத்திற்கு தனியார் கல்லூரிகள் மூலமாக வந்த நிதியும் தற்போது குறைந்து விட்டது. ஏனென்றால் பல தனியார் கல்லூரிகள் தன்னாட்சி கல்லூரிகளாக அங்கீகாரம் வழங்கப்படாததும் சென்னை பல்கலைக் கழகத்திற்கு நிதி குறைவுக்கு காரணமாக இருக்கிறது.

ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் அலுவலர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் அங்கு காலவரையற்ற போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்களும் அலுவலர்களும் போராட்டத்தில் இறங்கியுளளதால் தமிழகம் பல்கலைக் கழகங்களின் போராட்டக் களங்களாக மாறி வருவது வேதனை அளிக்கிறது.

தமிழக அரசு பல்கலைக் கழகங்களில் ஏற்பட்டுள்ள நிதி தணிக்கை அதிருப்திகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்கல்வித் துறை செயலாளர் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. இருந்தாலும் இந்தக் குழு விசாரணை நடத்தி தீர்வு காண்பதற்கு ஒரு சில மாதங்கள் கூட எடுத்துக் கொள்ளலாம். ஆகவே அதற்கு முன்பாக இந்த பல்கலைக் கழகங்களில், போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரவும், பிரச்னைகளை தீர்க்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.