தமிழ்நாடு

‘கொரோனாவால் வேலையை இழந்தேன்’ முறுக்கு விற்கும் பேராசிரியர் 

EllusamyKarthik

கொரோனாவினால் வேலையை இழந்த தனியார் கல்லூரி பேராசிரியர் மகேஷ்வரன் தன் அன்றாட தேவைகளையும், செலவுகளையும் சமாளிப்பதற்காக முறுக்கு விற்பனை செய்து வருகிறார்.

அவரை தொடர்பு கொண்டு பேசினோம்...

"நெய்வேலி தான் என் சொந்த ஊர். எனக்கு முப்பது வயதாகிறது. கம்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டம் முடித்துள்ளேன். கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் கம்யூட்டர் சயின்ஸ் துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் வேலை செய்து வந்தேன். கை நிறையச் சம்பளம், பிடித்த வேலை, குடும்பம் என வாழ்க்கை கொரோனாவுக்கு முன்னர் வரை சரியாகத் தான் போய்க் கொண்டிருந்தது. 

கொரோனா தாக்கத்தினால் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும் என முதலில் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் புதிதாக மூன்று மாணவர்களைக் கல்லூரியில் சேர்த்தால் வேலையை உறுதி செய்வதாக கல்லூரி நிர்வாகம் என்னிடம் தெரிவித்தது. எனக்கு அதில் உடன்பாடில்லாததால் வேலையை ரிசைன் செய்து விட்டு ஊருக்கே திரும்பி விட்டேன். ரெண்டு வருடத்திற்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. ஆறு மாத கை குழந்தையும், மனைவியும் என்னை நம்பி இருப்பதால் குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்ய வேலை தேடினேன். தற்போதைய சூழலில் புதிய வேலைக்குச் சாத்தியம் இல்லாததால் வருமானத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டுமென யோசித்து வந்தேன். 

வீட்டில் அப்பா சின்னதாக நடத்தி வரும் மிட்டாய்க் கடைக்கு ஊரடங்கினால் மொத்த வியாபாரிகளிடமிருந்து சரக்கு வராமல் இருந்தது. சரி சும்மா இருக்கும் நேரத்தில் அப்பாவுக்கு உதவ குடும்பத்தினரின் உதவியோடு முறுக்கு சுட்டு கடையில் வைத்தேன். ஒரு கிலோ அரிசி மாவில் முறுக்கு தயாரித்து கடையில் வைத்த சில நிமிடங்களிலேயே விற்று விட்டது. அக்கம் பக்கத்தில் உள்ள கடைக்காரர்களும் இதை அறிந்து அவர்களுக்கும் முறுக்கு வேண்டுமென ஆர்டர் கொடுத்தனர். படிப்படியாக ஆரம்பித்த இந்த வேலை தற்போது ஐந்து கிலோ மாவில் குடும்பத்தினரின் உதவியோடு தினமும் முறுக்கு தயார் செய்து சுமார் நான்குக்கும் மேற்பட்ட கடைகளுக்கு விநியோகிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. அனைத்து செலவுகளும் போக இதன் மூலம் நாளொன்றுக்கு ஐந்நூறு ரூபாய் கிடைக்கிறது. இந்த வருமானம் போதாததாக இருந்தாலும் அடுத்த வேலைக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து செய்வேன்" என்கிறார் அவர்.