தமிழ்நாடு

“ஒரு ஆண் துணைகூட இல்லாமல் ஈழப் பெண்கள் தவிக்கிறார்கள்”- நேரடி ஆய்வு

“ஒரு ஆண் துணைகூட இல்லாமல் ஈழப் பெண்கள் தவிக்கிறார்கள்”- நேரடி ஆய்வு

rajakannan

இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் நிலை கவலையுறச் செய்வதாக அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய பேராசிரியர் ராமு மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

பேராசிரியரும் தமிழ் ஆர்வலருமான ராமு மணிவண்ணன் இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆய்வை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய ராமு மணிவண்ணன், சென்னை விமான நிலையத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார். 

போர் நடந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், தமிழ் இளைஞர்களின் நிலை என்ன?

“யாழ்ப்பாணம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர் வாழும் இடங்களில் உள்ள பள்ளிகளுக்குள் போதைப் பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் மிகப்பெரிய அடையாளம் கல்விதான். தமிழ் மக்களின் கல்வி, கல்விக்கூடங்களிலேயே அழிக்கப்படுகிறது. தமிழ் மக்களின் கல்வி நிலை தற்போது மிகவும் பின் தங்கிய நிலையில்தான் உள்ளது.” 

பெண்களின் நிலை எப்படி உள்ளது?

“விதவை பெண்களின் நிலைதான் கவலைக்குரியதாக உள்ளது. வடக்கு மாகாணத்தில் 90 ஆயிரத்திற்கு மேலும், கிழக்கு மாகாணத்தில் 37 ஆயிரத்திற்கு மேலும் விதவை பெண்கள் உள்ளனர். மொத்தமாக, வடக்கு, தெற்கு மாகாணத்தில் ஒன்றே கால் லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் கணவனை இழந்துள்ளனர்.

கணவன், தந்தை, சகோதரன் இப்படி எந்த உறவுமின்றி பெண்கள் தவிக்கின்றனர். ராணுவ குடியிருப்புகள், சிங்கள குடியிருப்புகள், வேலையில்லாமல், கடன் தொல்லை உள்ளிட்ட பிரச்னைகளால் அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கடன் தொல்லையால் தமிழ்ப் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை அங்கு உள்ளது. அவ்வளவு அவலமான நிலையில் தமிழ் பெண்கள் உள்ளனர்.”

தமிழர்கள் வாழும் பகுதியில் மேற்கொண்டுள்ள ஆய்வுகளை அடுத்தகட்டமாக எங்கு கொண்டு செல்லப் போகிறீர்கள்?

“ஆய்வறிக்கையை தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும், மத்திய அரசுக்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளுக்கும் முன்பாக வைக்க உள்ளோம்.”