தமிழ்நாடு

“அது நிர்மலா தேவி வாக்குமூலமே இல்லை” - பரபரப்பு குற்றச்சாட்டு

webteam

நிர்மலா தேவி வாக்குமூலம் என்ற பெயரில் சிபிசிபிஐடி யாரையோ காப்பாற்ற முயற்சி செய்வதாக பேராசிரியர் முருகனின் வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் குற்றம்சாட்டியுள்ளார். 

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட‌ வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ‌ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள முருகன் கடந்த சில நாட்களாக நீதிமன்றம் வரும் பொழுது ஊடகத்தினரை சந்திக்க விரும்புவதாகவும், தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் எனத் தொடர்ந்து கூறி வருகிறார். 

இந்நிலையில் வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது. இதுதொடர்பாக முருகன் தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் புதியதலைமுறைக்கு பேட்டி அளித்தார். அதில், “நிர்மலா தேவி வாக்குமூலம் என ஊடகங்களில் பரபரப்பாக போடப்பட்டது நிர்மலா தேவியின் வாக்குமூலம் அல்ல. நிர்மலா தேவி கொடுத்ததாக காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட வாக்கு மூலம். நிர்மலா தேவி எந்த நீதிமன்றத்திலும் தான் குற்றம் செய்ததாகவும், அதற்கு முருகன், கருப்பசாமி உடந்தையாக இருந்ததாகவும் கூறவில்லை. இது காவலர்களால் உருவாக்கப்பட்ட வாக்குமூலம்.

சிபிசிஐடி இந்த வழக்கில் யாரை காப்பாற்ற வேண்டும், யார் அப்பாவிகளை இணைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலம் அது. நிர்மலா தேவி ஆடியோவிலேயே யுனிவர்சிடியில் உயர் அதிகாரிகள் சில அசைன்மெண்ட் சொல்லியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் உயர் அதிகாரிகள் யாரும் குற்றவாளியாக இல்லையே. இந்த வழக்கில் அவர்களுக்கு பிணைகள் மறுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தை நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி அனுகினால் உயர்நீதிமன்ற தீர்ப்புகள் மாற்றி அமைக்கப்படும். இந்த வழக்கில் உண்மை அனைவருக்கும் தெரிய வரும்” என்றார்.