Hospital pt desk
தமிழ்நாடு

தேனி: கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்த பேருந்து – சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள் காயம்

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்ற பேருந்து வயலில் கவிழ்ந்த விபத்தில் - மாணவ மாணவிகள், இரண்டு பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

PT WEB

செய்தியாளர்: மலைச்சாமி

கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியில் இருந்து 90-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை அழைத்துக் கொண்டு, தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு இரண்டு சுற்றுலா பேருந்துகள் சென்றுள்ளன.

அதில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள குன்னூர் பகுதியில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வயலில் கவிழ்ந்த பேருந்து

அப்போது பேருந்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் திடீரென பேருந்து கவிழ்ந்ததால் அலறியபடி கூச்சலிட்டனர். இதில் மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் மற்றும் முத்துமாரி, சரண்யா என்ற இரண்டு பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கானாவிளக்கு காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கானாவிளக்கு காவல்துறையினர் சுற்றுலா பேருந்தை இயக்கிய ஓட்டுனர் தூங்கிவிட்டதால் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை எற்படுத்தியது.