தமிழ்நாடு

விமான டிக்கெட் விலைக்கு பஸ் டிக்கெட் ! அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்

விமான டிக்கெட் விலைக்கு பஸ் டிக்கெட் ! அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்

webteam

ஆயுத பூஜை, விஜயதசமி, வாரக்கடைசி என 4 நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

இன்றைய தினம் ஆயுதபூஜை, நாளை விஜயதசமி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இதனால் சென்னையிலிருந்து சொந்த ஊரான பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கான முன்பதிவுகள் முன்பே தொடங்கியிருந்த போதிலும், கடைசி நேரத்தில் விடுமுறை கிடைத்ததால் பலரும் சென்னையிலிருந்து நேற்று மாலை அவசரமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்சென்றனர்.

இந்த 4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் 2,775 அரசுப் பேருந்துகளுடன் கூடுதலாக 770 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதில் 90% சீட்டுகள் ஆன்லைன் மூலமே நிரம்பிவிட்டது. மீதமிருந்த சீட்டுகளுடன் விற்பனையாகிவிட்டன. இதனால் நேற்று வெளியூர் செல்வோர்களுக்கு பஸ் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்ட சில தனியார் பேருந்து நிறுவனங்கள், தங்களது கட்டணத்தை 150% வரை உயர்த்திக்கொண்டன. வழக்கமாக தனியார் ஏசி பேருந்துகளில் சென்னையிலிருந்து மதுரை மற்றும் கோயம்பத்தூருக்கு ரூ.700 முதல் 900வரை கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் நேற்றைய தினம் ரூ.1,500 முதல் ரூ.2,200 வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை தினங்களில் தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தினால் நடவடிக்கைப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். ஆனாலும் நேற்று தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தி வசூலித்ததால், இதற்காக முறையான சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதேபோல ஆன்லைனில் வரும் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்துகளில் 1800 முதல் 2200 வரை சில பஸ்கள் கட்டண வசூலில் ஏற்கெனவே இறங்கிவிட்டது. இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தனியார் பஸ்களின் கட்டண கொள்ளையை தடுக்கலாம்.