“மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் சீர்காழி செல்லும் பயணிகளை ஏற்ற முடியாது” என வாக்குவாதத்தில் நடத்துனர் ஈடுபட்டதால் சீர்காழியில் தனியார் பேருந்தை கிராமமக்கள் சிறைபிடித்தனர்.
மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் அனைத்து பேருந்துகளும் சீர்காழி வழியேதான் செல்ல வேண்டும். ஆனால், மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து சீர்காழி வழியே சிதம்பரம் செல்லும் தனியார் பேருந்துகள் சீர்காழி செல்லும் பயணிகளை பேருந்தில் ஏற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்றிரவு மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து சீர்காழி செல்ல பெண்கள் சிலர் தனியார் பேருந்தில் ஏறி உள்ளனர். அப்போது பேருந்தின் நடத்துனர், "சிதம்பரம் செல்லும் பயணிகள் மட்டுமே ஏற வேண்டும். பேருந்து சீர்காழி செல்லாது” எனக்கூறி அவர்களிடம் வாக்குவாதம் செய்து இறக்கி விட்டுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சீர்காழியில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சீர்காழி பேருந்து நிலையத்தில் திரண்ட பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் அவ்வழியே வந்த தனியார் பேருந்தை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த சீர்காழி போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறைபிடிக்கப்பட்ட பேருந்து மீட்டு அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது