ஓட்டுனர்  புதியதலைமுறை
தமிழ்நாடு

செல்ஃபோனில் ஐபிஎல் மேட்ச் பார்த்தபடி அலட்சியமாக பேருந்தை இயக்கிய ஓட்டுனர்.. அதிகாரிகள் வைத்த செக்!

கடலூரில் செல்ஃபோனில் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பார்த்தபடி, அலட்சியமாக பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

யுவபுருஷ்

கடலூர் மாவட்டத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி கடந்த 24ம் தேதி இரவு தனியார் பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இதில் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில், பேருந்தை இயக்கிய ஓட்டுனர் தனது செல்போனில் மும்பை- குஜராத் இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே அலட்சியமாக பேருந்தை ஓட்டிச் சென்றார்.

இதனால் ஏற்பட்ட கவனக் குறைவால், பேருந்துக்கு முன்னால் சென்ற கார் மற்றும் அரசு பஸ் மீது இருமுறை மோதுவது போல் சென்றுள்ளார். அப்போது, பேருந்து ஓட்டுநரின் அருகில் அமர்ந்திருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால், மீண்டும் சுயநினைவுக்கு வந்த அவர், திடீரென பிரேக்கை பிடித்துள்ளார்.

இதற்கிடையே, மீண்டும் ஒரு முறை அரசு பேருந்தை உரசுவது போலவும் சென்றுள்ளார். இதனால், இந்த தனியார் பேருந்தில் சென்ற அனைத்து பயணிகளும் எப்பொழுது பஸ்சை விட்டு கீழே இறங்குவோம், பாதுகாப்பாக செல்வோமா என்ற பீதியுடன் அச்சத்தில் பயணம் செய்தனர். தொடந்து, பேருந்து விருத்தாசலம் பேருந்து நிலையம் வந்து நின்ற பிறகு அதிலிருந்து இறங்கிய பயணிகள், அப்பொழுதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

கிரிக்கெட் விளையாட்டை பார்த்துக் கொண்டே பேருந்தை இயக்கி பயணிகளின் உயிருடன் விளையாடியது சம்பந்தமாக நமது புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்களேயும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இதன் அடிப்படையில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனரை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அந்த ஓட்டுனர் விருத்தாசலம் அடுத்த சக்கரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவர் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே பேருந்தை ஓட்டியது தவறு எனக் கூறி அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, அவருக்கு உரிய அறிவுரை கூறிய அதிகாரிகள், அவரது ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்து, ஒரு மாத காலத்திற்கு ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர். மேலும், வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் கூறும் போது, செல்போன் பார்த்துக்கொண்டோ செல்போன் பேசிக் கொண்டோ, வாகனங்களை இயக்கினால் ஓட்டுனர் உரிமம் முழுவதுமாக ரத்து செய்யப்படும். வாகன ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.